
வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் மூலம் இயக்குனரானார். அந்த திரைப்படத்தில் சென்னைக்கு அருகே வசிக்கும் இளைஞர்கள் காதலை எப்படி கையாளுகிறார்கள் என காட்சிப்படுத்தியிருந்தார். அப்படத்திற்கு பின் மெட்ராஸ், கபாலி, காலா என சீரியஸான படங்களை அவர் இயக்கினார். அதேநேரம், இந்த 3 திரைப்படங்களிலும் அழகிய மெல்லிய காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதன்பின் அவர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘சர்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் 40 வருடங்களுக்கு முன்பு வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பற்றிய திரைப்படமாகும். இப்படம் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு பின் அடுத்து ஒரு காதல் திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்த துஷாரா விஜயன் மற்றும் ‘ஓ மை கடவுளே’ புகழ் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

இந்நிலையில், திடீரென அப்படத்திலிருந்து அசோக் செல்வன் விலகி விட்டாராம். வேறு சில படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் இதிலிருந்து அவர் விலகிவிட்டதாக தெரிகிறது. எனவே, அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.





