More

ரீவைண்ட்-காரைக்குடியை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய சிதம்பர ரகசியம்

கண்மணிப்பூங்கா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் விசு தொட்ட படங்கள் எல்லாம் வெற்றிதான். பல படங்களை இயக்கியுள்ள விசு, நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். விசுவின் படங்கள் எல்லாமே ஃபேமிலி டிராமாக்கள்தான். ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கண்ணீரோடு சொல்லாமல் கொஞ்சம் பன்னீர்கலந்தது போல் மென்மையாக ஜாலியாக சொல்வதுதான் விசுவின் பாணி. இவரது படங்கள் எல்லாமே வித்தியாசமான கதையம்சமுள்ள குடும்ப படங்களாகத்தான் இருக்கும்.

Advertising
Advertising

விசுவுக்கு ஒவ்வொரு படத்திலும் பக்கபலமாக இருந்தவர் அவரது சகோதரர் கிஷ்முதான். கிஷ்மு , விசு நடிப்பில் வந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். ஏனென்றால் கிஷ்முதான் கதை விவாதத்தில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது. கிஷ்மு மறைந்த பிறகு விசு மட்டும் தனித்தே இயங்கிய படங்கள் முந்தைய அளவுக்கு ரீச் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி மேட்டருக்கு வருவோம். விசு குடும்ப சித்திரங்களில் இருந்து மாறுபட்டு கொஞ்சம் வித்தியாசமாக கெட்டிமேளம், ராஜதந்திரம் உட்பட சில க்ரைம் அதிரடி படங்களை இயக்கி இருக்கிறார் ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் சிதம்பர ரகசியம்,. இந்த படத்தை வழக்கமான தன் காமெடி கலந்து க்ரைம் த்ரில்லராக விசு கொடுத்திருந்தார்.

அருண்பாண்டியன் கதாநாயகன் மற்றொரு அப்பாவி கதாநாயகனாக எஸ்.வி சேகர், இந்த கதாநாயகர்களுக்கும் மேலாக விசு முக்கியமான சி.ஐ.டி பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் முக்கியமாக விசு கையாண்டிருந்த விசயம் படத்தின் ஷூட்டிங் லொக்கேஷன்கள். ஏவிஎம், எஸ்.பி முத்துராமன், காரைக்குடி நாராயணன், கண்ணதாசன், இராமநாராயணன் என இப்பகுதியில் இருந்து சென்ற இவர்கள் தயாரிப்பாளர்களாகவும் இயக்குனர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த ஊரான காரைக்குடி பகுதிகளை தங்கள் படங்களில் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியதில்லை ஏதாவது ஒரு சில படங்களில் பட்டும் படாமல் காண்பித்து இருக்கலாம். ஏவிஎம் நிறுவனம் தங்கள் சொந்த ஊரான காரைக்குடியில் முதன் முதலில் ஸ்டுடியோ அமைத்து வேதாள உலகம் படத்தை 40களில் தயாரித்து அதோடு ஸ்டுடியோவை சென்னை கொண்டு சென்றது வரலாறு.அதன் பின் தங்கள் ஊரான காரைக்குடி பகுதிகளை நறுக்கென்று திரையில் காண்பித்ததா என்றால் இல்லை தங்கள் ஸ்டுடியோவுக்குள் மட்டுமே காரைக்குடியையும் தூத்துக்குடியையும் காண்பித்தது.

ஆனால் ஏவிஎம் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த விசுதான் முதலில் லைம் லைட்டில் நன்றாக செட்டிநாடு என சொல்லக்கூடிய காரைக்குடி பகுதிகளை விரிவாக காண்பித்தவர் என சொல்லலாம். காரைக்குடி, கானாடு காத்தான், செட்டிநாடு, கோட்டையூர், சங்கரபதிக்கோட்டை, ஆறாவயல் காரைக்குடி பகுதிகளை விரிவாக காண்பித்து பிரித்து மேய்ந்திருந்தார் என்றுதான் லோக்கலாக சொல்ல வேண்டும்.

காரைக்குடி பகுதிகள் இன்றும் ஷுட்டிங்கில் பிஸியோ பிஸி. இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி, ஹரி போன்றோர் காரைக்குடி பகுதிகளில் அதிகம் படம் இயக்குவார்கள் காரணம் இந்த பக்கம் இருக்கும் பழமையான வீடுகள் தான் காரணம். நகரத்தார் என்று அழைக்க கூடிய இப்பகுதியினர் அந்தக்காலங்களில் பர்மாவில் அதிகம் இருந்தனர். பர்மா தேக்கு என்று சொல்லக்கூடிய அசல் தேக்குகளை கொண்டு வந்து பிரமாண்டமாக தூண்கள் அமைத்து தொட்டில் முற்றம் அமைத்து காண்போர் வியக்கும் வண்ணம் பல மாளிகைகளை கட்டினர். இது போன்ற பகுதிகளை சிதம்பர ரகசியம் படம் மூலம்  அன்றே விரிவாக காண்பித்தவர் விசு. இன்றைய காரைக்குடி ஷூட்டிங்குகளுக்கு அன்றே முன் உதாரணமாக திகழ்ந்தது இப்படம்.

மருதுபாண்டியர்கள் கட்டிய சங்கரபதிக்கோட்டை இன்றும் அடர்ந்து போய் உள்ளது இந்த பகுதிகளில் கமல் நடித்த மருதநாயகம் படத்தின் சில காட்சிகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதிகளில் அந்த காலங்களிலேயே விசு படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். இப்படத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் உட்கார்ந்து ஆலோசிப்பது போன்ற காட்சிகள் இந்த பகுதிகளில்தான் எடுக்கப்பட்டது.

சிதம்பர ரகசியம் படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானதுதான். அத்தை பெண்ணை கட்டிக்கொள்ளணும் என்ற ஆசையில் வேலை தேடுகிறேன் என்று அம்மாஞ்சியான எஸ்.வி சேகர் ஒரே இரவில், கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற விசயங்களில் மாட்டிக்கொள்வதும், அதற்கு எஸ்.வி சேகரின் அத்தை பெண்ணான இளவரசியின் காதலர் அருண்பாண்டியன் சி.ஐடி ஆபிஸராக பீமாராவ் என்ற கதாபாத்திரத்தில் வரும் விசுவுடன் சேர்ந்து, வீணாக மூன்று கேஸில் ஒரே நாள் இரவில் மாட்டிக்கொண்ட எஸ்.வி சேகரை மீட்பதுதான் கதை.

படத்தில் வித்தியாசமான வில்லனாக எஸ்.வி சேகரிடம் கடத்தல் பெட்டியை கொடுத்து விடும் கதாபாத்திரத்தில் அறங்காவலர் அம்பலவாணனாக சங்கிலி முருகன் நடித்திருந்தார் மற்றொரு வில்லனாக டெல்லி கணேஷ் நடித்திருந்தார்.

மனோரமாவுக்கு காரைக்குடி ஆச்சியாக நடிக்க சொல்லியா தர வேண்டும் எஸ்.வி சேகரின் அம்மாவாக வந்த மனோரமா இப்படத்தில் அப்பாவி காரைக்குடி ஆச்சியாக பட்டைய கிளப்பி இருந்தார் கானாடுகாத்தான் காத்தமுத்து செட்டியார் என்ற பாத்திரத்தில் எஸ்.வி சேகரின் அப்பாவாக கிஷ்மு நடித்திருந்தார். கூடவே நடிகர் சீனிவாசன், காந்திமதி, டி.பி கஜேந்திரன் உள்ளிட்டோரும் கலக்கி இருந்தனர் எஸ்.வி சேகர் மூன்று கேஸ்களில் மாட்டிக்கொண்ட அடுத்தடுத்த காட்சிகளில் அவரை தேடி வேறு வேறு ஸ்டேசன்களில் போலீஸ் வருவதும், மோப்ப நாய் வருவதும் என வரும் காட்சிகள் கலகலப்பூட்டி இருக்கும் இந்த  காட்சிகளில் மனோரமா, சீனிவாசன், எஸ்.வி சேகர் போன்றோர் நன்றாகவே சிரிக்க வைத்தனர்.

14 டிசம்பர் 1985ல் வெளியாகிய இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். குறிப்பாக பின்னணி இசையில் மிரட்டி இருந்தார்கள். முதலில் எஸ்.வி சேகரும், சங்கிலி முருகனும் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் சங்கர் கணேஷ் அசத்தலான பின்னணி இசையை கொடுத்து மிரட்டி இருந்தார்கள் என சொல்ல வேண்டும். இவர்களின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

மிக சிறப்பாக க்ரைமுக்கு கிரைம் நகைச்சுவைக்கு நகைச்சுவை, அதிரடிக்கு அதிரடி என எல்லாவற்றிலும் வேகம் காட்டி சிறப்பான திரைக்கதை அமைத்து விசு இயக்கிய இப்படம் 80ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத திரைப்படமாகும்.

Published by
adminram

Recent Posts