ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘சியான்கள்’ - திரைப்பட விமர்சனம்
வைகறை பாயன் இயக்கி கரிகாலன் நடித்து தயாரிதுள்ள திரைப்படம் சியான்கள். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படம் பற்றிய விமர்சனத்தை பார்ப்போம் வாருங்கள்:
கிராமங்களில் சியான்கள் என்றால் வயாதனவர்கள் மட்டுமல்ல.. குறும்பு செய்யும் தாத்தாக்கள் என்றும் அர்த்தம். அந்த பின்னணியில்தான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 7 தாத்தக்கள். 60 வயது தாண்டிய பிறகும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தனித்தனி ஆசைகள் இருக்கின்றனர். அதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
இந்நிலையில், மருகமகள் கையால் அடி வாங்கிய அவமானம் தாங்காமல் 7 பேர்களில் ஒருவரான நாராயணசாமி தற்கொலை செய்து கொள்கிறார். அதேபோல், சொத்துக்கு ஆசைப்பட்டு மகனே விஷ ஊசி செலுத்தியதில் துரை சுந்தரம் இறந்து போகிறார்.
தங்களின் கண் முன்னே 2 நண்பர்கள் மரணிக்க குடும்பத்தினரே காரணமாக இருப்பதால் மீதமிருக்கும் 5 பேர் என்ன முடிவு எடுத்தனர்?. இந்த சமுதாயம் முதியவர்களை எப்படி நடத்துகிறது? அவர்களின் முக்கியத்துவம் என்ன என்பதை ஆணி அடித்தது போல் இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள கரிகாலன் சியான்களின் நண்பராகவும், அவர்களுக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். புதுமுகமான ரிஷா ஹரிதாஸ் அழகிய கிராமத்து பெண்ணாக மனதை அள்ளுகிறார். ஒருபக்கம் சியான்கள் குடும்ப பிரச்சனயில் சிக்கி தவிக்கும் காட்சிகளுக்கு நடுவே கரிகாலன் - நிஷா ஹரிதாஸ் காதல் ரசிக்க வைக்கிறது.
சியான்கள் வேடத்தில் நடித்துள்ள நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரைசுந்தரம் ஆகிய 7 பேரும் போட்டு போட்டு நடித்துள்ளனர். குடும்பத்தினர் தங்களை நடத்தும் விதத்தை கண்டு அவர்கள் கலங்கி நிற்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
அதிலும், கவலைக்கிடமான நிலையில் நளினிகாந்த் தனது மனைவிக்கு தண்டட்டி போட்டும் விடும் காட்சி மிகவும் உருக்கமாக அமைந்துள்ளது.
கிராம கதை என்றால் அங்கே ஒரு பட்டதாரி வாலிபர், பண்ணையார் மகளுக்கு அவர் மீது காதல், சாதி எதிர்ப்பு, சண்டியர் ஹீரோ, அவரின் நண்பர்கள் என பார்த்து புளித்துப்போன பழைய கதையில் பயணிக்காமல் சியான்களின் வாழ்க்கையை கதையாக எடுத்ததற்காகவே படக்குழுவை நிச்சயம் பாராட்டலாம். மேலும், வயதானவர்களை பெரிசு என மதிக்காமல் இளசுகள் சுத்தும் இந்த காலத்தில் சியான்கள் போன்ற திரைப்படம் தேவையானதாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருந்தால் மேலும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.
முதல் பாதியை கலகலப்பாகவும், இரண்டாம் பாதியை உணர்வுபூர்வமாகவும் இயக்கியுள்ள இயக்குனர் வைகறை பாலன் பாராட்டுக்குரியவர். இவரிடமிருந்து சிறந்த கிராம கதைகளை எதிர்பார்க்கலாம். படத்திற்கு பெரிய பலமாக முத்தமிழின் இசை அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பாபு குமார் கிராம அழகையும், வாழ்க்கையும் அழகாக படம் பிடித்துள்ளார்.
மொத்தத்தில் ‘சியான்கள்’திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்க்கலாம்!..