பாமகவில் விரிசல்… முக்கிய நிர்வாகி நீக்கம் – தொண்டர்கள் எதிர்ப்பு !

பாமகவின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட துணைப் பொதுச்செயலாளராக இருந்த வைத்தி என்பவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவின் வளர்ச்சிக்கு காடுவெட்டி குருவிற்குப் பிறகு முக்கியமானவராக  இருந்தவர் வைத்தி. குருவின் இறப்புக்கு பிறகு அவரின் முகம் இன்னும் பிரபலமானது. அவர் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் துணைப்பொதுச் செயலாளர் மற்றும் மாநில வன்னியர் சங்கச் செயலாளர் ஆகிய இரு பதவிகளை வகித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வெளியான பாமக தலைவர் ஜி கே மணியின் அறிக்கையில் வைத்தி இனிமேல் மாநில வன்னியர் சங்கச் செயலாளர் பதவியில் மட்டும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வைத்தியின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு சிலர் பாமகவின் கொடிகளை கம்பத்தில் இருந்து இறக்கி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வைத்தியின் மனைவி ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு நின்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram