கொலை கொலையா முந்திரிக்கா!.. தனுஷின் ராயன் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!..
அம்மாவும் அப்பாவும் வெளியே சென்று விட்டு வீடு திரும்பாத நிலையில், அவர்களுக்கு என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என பதறிப்போய் தங்கைக்கு பெயர் வைக்க வந்த பூசாரி வீட்டுக்கு தம்பிகளுடனும் தங்கையுடனும் செல்கிறார் குட்டி தனுஷ். அங்கே நடக்கும் ஒரு பிரச்சனையில், தனது தம்பிகள் மற்றும் தங்கையை தூக்கிக் கொண்டு சென்னைக்கு வந்து விடுகிறார்.
காலையில் மாவுமில், இரவு நேரத்தில் ஃபாஸ்ட் ஃபுட் கடை என நடத்தி வரும் தனுஷ் தனது தம்பிகளுக்காகவும் தங்கைக்காகவும் திருமணம் செய்யாமல் வானத்தைப் போல அண்ணன் போல பாதுகாத்து தனது வாழ்க்கையை தியாகம் செய்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் தம்பிக்காக இறங்கி ஒரு பெரிய தலையை தனுஷ் சம்பவம் செய்ய அதன் பின்னர், அவர்களது குடும்பத்திற்கு அடுத்தடுத்து சிக்கல் மேல் சிக்கல் வந்துக் கொண்டே இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் ரவுடிகளுக்குள் சண்டையை மூட்டி விட்டு குளிர்காயும் கதாபாத்திரத்தில் அலட்டிக் கொள்ளாமல் நடித்துள்ளார். தனுஷுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை வரவும் அவரே காரணமாக உள்ளார்.
ஒவ்வொரு முறையும் தனது குடும்பத்தினருக்கு எதிராக வரும் அத்தனை பேரையும் தனியாளாக நின்று தனுஷ் வதம் செய்து விடுகிறார். தனுஷின் தம்பியாக நடித்துள்ள சந்தீப் கிஷன் மற்றும் அவரது காதலியாக குண்டம்மாவாக வரும் அபர்ணா பாலமுரளியின் போர்ஷன் மட்டுமே இந்த படத்தில் கமர்ஷியலாகவும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாக உள்ளது.
தனுஷுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருப்பார் என்று பார்த்தால், எஸ்.ஜே. சூர்யாவின் முதல் மனைவியாக நடித்துள்ளார். ஆனால், வரலட்சுமி சரத்குமாரை விட்டு விட்டு 2ம் மனைவி வீட்டிலேயே எஸ்.ஜே. சூர்யா இருந்து வருகிறார்.
சென்னைக்கு செல்வராகவன் வண்டியில் ஏறி தம்பிகளுடனும் தங்கையுடனும் வரும் குட்டி தனுஷுக்கு அடைக்கலம் கொடுத்து வேலை வாங்கிக் கொடுக்கிறார் செல்வராகவன். அதன் பின்னராவது தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தோஷமாக இருந்தார்கள் என்றால் கடைசி வரை யாருமே சந்தோஷமாக இல்லை.
தம்பிகளின் துரோகம், தங்கைக்கு நேரும் சோகம் எஸ்.ஜே. சூர்யாவுடன் பகை என ராயன் கொலைகளின் ராஜ்ஜியமாக திகழ்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் இந்த படத்துக்கு உயிர் என்று சொல்ல வேண்டும். கதை மற்றும் திரைக்கதையை இன்னமும் தனுஷ் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.
ராயன் - ரணகளம்!
ரேட்டிங்: 3/5.