Idli Kadai: தமிழில் சில ஹிட் படங்களை இயக்கிய கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். இவரின் நிஜப்பெயர் வெங்கட் பிரபு. கஸ்தூரிராஜா சில படங்களை தயாரித்து அதில் நஷ்டம் அடைந்து இனிமேல் சினிமாவை வேண்டாம், குடும்பத்துடன் சொந்த ஊரான தேனிக்கு போய்விடலாம் என முடிவெடுத்தபோது, கடைசியாக ஒரு முயற்சி என அவரின் மூத்த மகன் செல்வராகவன் நம்பிக்கை கொடுத்து உருவான திரைப்படம்தான் துள்ளுவதோ இளமை. பட்ஜெட் காரணமாக அந்த படத்தில் கஸ்தூரி ராஜா தனது மகன் வெங்கட் பிரபுவை ஹீரோவாக நடிக்க வைத்தார். சினிமாவுக்காக அவரின் பெயர் தனுஷாக மாறியது.
துள்ளுவதோ இளமை படத்தில் நிறைய கவர்ச்சியான காட்சிகள் இருப்பதால் அந்த படம் இளைஞர்களை சீரழிப்பதாகவும், இந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் பலரும் அப்போது போர்க்கொடி தூக்கினார்கள். இதனாலேயே அந்த படம் நல்ல வசூலை பெற்றது. இந்த படம் கஸ்தூரி ராஜாவின் கடன்களை அடைக்க உதவியது. அதன்பின் மீண்டும் சொந்த தயாரிப்பில் செல்வராகவன் இயக்க காதல் கொண்டேன் படம் உருவானது. அந்த படத்தின் வெற்றி கஸ்தூரி ராஜா குடும்பத்தின் சூழ்நிலையையே மாற்றிவிட்டது.
அதன்பின் தனுஷும், செல்வராகவனும் சினிமாவில் வளர்ந்தார்கள், இப்போது கோலிவுட்டில் தனுஷ் முக்கியமான நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இதுவரை இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
இந்நிலையில்தான் நேற்று நடைபெற்ற இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘சின்ன வயதில் தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என எனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் கையில் பணம் இருக்காது. நானும் என் இரண்டு சகோதரிகளும் வயலில் பூ பறிப்போம். இரண்டு ரூபாய் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு போய் அந்த இட்லி கடையில் அந்த காசை கொடுத்தால் நாலு இட்லி கிடைக்கும். இந்த படத்தில் இட்லி கடைதான் ஹீரோ. அதனால்தான் அந்த தலைப்பை இந்த படத்திற்கு வைத்திருக்கிறேன்’ என பேசி இருந்தார்.
ஆனால் இதை பலரும் நம்பாமல் தனுஷ் பொய் சொல்கிறார் என அவரை ட்ரோல் செய்தார்கள். இந்நிலையில்தான் மறைந்த இயக்குனரும் நடிகருமான விசு பல வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோவை இப்போது தனுஷ் ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
அதில் என்னிடம் 15 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக வேலை செய்தவர்தான் கிருஷ்ணமூர்த்தி என்கிற கஸ்தூரிராஜா. தனுஷ், செல்வராகவன் இருவரையும் சிறுவனாக இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். ஆரம்பத்துல கண்ணம்மாபேட்டையில் ஒரு சின்ன சந்து வீட்டில்தான் அவங்க இருந்தாங்க. அந்த வீட்ல ஒரு டிவி கூட இருக்காது எங்க அண்ணன் வீட்டில் வந்துதான் டிவி பார்ப்பார்கள்’ என அதில் அவர் பேசியிருக்கிறார்
