தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து சரி.. ஆனால் முருகதாஸ் எங்கே?

படத்தின் முதல் பாதியில் திரைக்கதை, சண்டைக்காட்சிகள், அனிருத்தின் பிண்ணனி இசை, இடைவேளை காட்சி, ரஜினியின் ஸ்டைல் கலந்த அதிரடி காட்சிகள் மற்றும் யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கட்டிப்போட்டது.

அதேநேரம், இடைவேளைக்கு பின் படம் சற்று தொய்வடைந்து விட்டதாகவும், முதல் பாதி அளவுக்கு 2ம் பாதியில் திரைக்கதை வேகம் எடுக்காததால் ரசிகர்கள் பலரும் தூங்கிவிட்டதாக கூறும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

மேலும், முருகதாஸ் படங்களில் வழக்கமாக இருக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் இதில் இல்லை என பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக, முருகதாஸ் திரைப்படங்களில் வடிவமைக்கப்படும் வில்லன் கதாபாத்திரம் போல் தர்பார் படத்தில் வில்லன் சுனில் ஷெட்டியின் கதாபாத்திரம் அமைக்கப்படவில்லை. வழக்கமான கேங்ஸ்டர் படங்களில் வரும் வில்லன் போலவே அவரின் கதாபாத்திரமும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும், ரஜினியும் அவரின் மகளும் காரில் வரும் போது டெம்போ விட்டு மோதி இடிப்பதெல்லாம் அதரப்பழசு. அதற்கு முந்தைய காட்சியில் ரயில் நிலையத்தில் அதிரடியாக, மிகவும் ஸ்டைலாக சண்டை போடும் ரஜினி அடுத்த காட்சியில் மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் படுத்திருப்பது திரைக்கதையை பாதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. 

அதோடு, முருகதாஸ் படங்களில் அமைக்கப்பட்டிருக்கும் புத்திசாலித்தனமான திரைக்கதை (Intelectual screenplay) இப்படத்தில் மிஸ்ஸிங். துப்பாக்கி படத்தின் ஒவ்வொரு காட்சியும், திரைக்கதையும் இதற்கு உதாரணம். ஹீரோ ரஜினி என்பதால் முருகதாஸ் அவருக்காகவே அனைத்து காட்சிகளையும் வடிவமைத்துள்ளது ஒரு வகையில் பலவீனமாகவே உள்ளது. 

குறிப்பாக முருகதாஸ் படங்களில் க்ளைமேக்ஸ் (இறுதிக்காட்சி) மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். தர்பாரில் அதுவும் இல்லை. அதனாலேயே இரண்டாம் பகுதி ரசிகர்களை கவராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது. 

Published by
adminram