தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்?
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் 'தலைவி'. கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தலைவா, தேவி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் பல்வேறு பிரச்னைகளைக் கடந்து இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் குயின் கங்கனா ரனாவதும், எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும் நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்தை முதல் ஆளாக தியேட்டரில் சென்று பார்த்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பின் அவர் பேசியதாவது, 'ஒரு பெண் எப்படி தன்னுடைய வாழ்க்கையில் துணிவுடன் சாதிக்கிறாள் என்பதை காட்டும் வகையில் தலைவி படத்தை எடுத்துள்ளார்கள், இது பாராட்டுதலுக்குரிய விஷயம்.
ஆனால், அதே நேரத்தில் இப்படத்தின் ஒரு இடத்தில் எம்.ஜி.ஆர் பதவிக்கு ஆசைப்பட்டது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர் என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது என்பதே உண்மை. இந்தக் காட்சியை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றார்.
மேலும், தன் படங்கள் மூலமும், பாடல்கள் மூலமும் தனக்குப் பின்னர் ஜெயலலிதா தான் அதிமுகவுக்கு தலைமை தாங்குவார் என்பதை அன்றே உணர்த்தினார் எம்.ஜி.ஆர். ஆனால், அப்படிப்பட்ட மனிதர் ஜெயலலிதாவை அவமதிப்பது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது, அதையும் நீக்க வேண்டும்.
திமுக அரசு எங்களுக்கும், எங்கள் தலைவிக்கும் கொடுத்த தொல்லைகள் பற்றி படத்தில் எதுவுமே இல்லை. வரலாறு என்று வரும்போது அனைத்தையும் சொல்லியிருக்க வேண்டும். திமுக எங்களுக்கு செய்தது சொல்லாமல் விட்டதெல்லாம் சொல்ல மறந்த கதை என கூறியுள்ளார்.