
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை தெரிந்த கர்நாடக மாநில விஜய் ரசிகர்கள் தினமும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பும் படப்பிடிப்பு நடக்கும் சிறைச்சாலை முன்பும் ஆயிரக்கணக்கில் கூடி, விஜய் படப்பிடிப்புக்கு வரும் போதும், படப்பிடிப்பை முடித்துவிட்டு போகும் போதும் அவரை சந்தித்து வருகின்றனர். விஜய்யும் தினமும் ரசிகர்களை ஓரிரு நிமிடங்கள் சந்தித்து பின்தான் செல்கிறார்
இந்த நிலையில் கர்நாடக மாநில ஷிமோகா சிறைச்சாலை முன்பு திடீரென இன்று காலை ஒரு கிரேன் வந்து நின்றது. இதனை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கொண்டு வந்தனர்., இதனை பார்த்து ஆச்சரியமடைந்த படக்குழுவினர் மற்றும் சிறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்க ஒரு பிரம்மாண்டமான மலர் மாலை ஒன்றை விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அந்த மாலையை விஜய்க்கு அணிவிப்பதற்காக இந்த கிரேனை கொண்டு வந்ததாகவும் கூறினார்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த விஜய் மிகுந்த ஆச்சரியம் அடைந்து அந்த ரசிகர்களை சந்தித்து அந்த மாலையையும் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு தமிழ் நடிகருக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் பிரம்மாண்டமான மலர்மாலையை உருவாக்கி அதை கிரேனில் கொண்டு வந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது குறித்த வீடியோவை கர்நாடக மாநில விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது



