
இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பார்த்தாலே நம்ம பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவரது முகம். புருவங்களின் மத்தியில் பொட்டு, கன்னங்களில் வெளிர் சிவப்புப் பருக்கள், உதட்டில் சிறு புன்னகை என்று ஏகப்பட்ட அழகான அடையாளங்களை கொண்டு வலம் வருபவர் இவர். எதார்த்தமான கிராமத்து தமிழ் பேசி, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் அஞ்சலி. அங்காடித் தெருவில் அப்பாவிப் பெண்ணாக நடித்து அப்பாவி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.

16.6.1986 ல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். அவருக்கு 2 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார். பின்னர் தமிழகம் வந்து சென்னையில் படிப்பைத் தொடர்ந்தார். கணிதத்தில் பட்டம் பெற்று குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது அவரது திரையுலகில் நுழைவதற்கு அடித்தளமிட்டது.
விளம்பரப் படங்களில் நடித்ததால் 2 தெலுங்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 2007ல் கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார்.
அங்காடித் தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். 2010ல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து இளைஞர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும்; பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் பெயர் பெற்றார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.
கீதாஞ்சலி, சர்வாதிகாரி போன்ற வெற்றிப்படங்களைத் தெலுங்கில் நடித்தார். இதன்மூலம் சிறந்த நடிகைக்கான 2 நந்தி விருதுகளைப் பெற்றார். 2016ல் வெளியான இறைவி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். தரமணியில் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இது சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

2008ல் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை கற்றது தமிழ் படத்திற்காகப் பெற்றார். 2011ல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை அங்காடித் தெரு படத்திற்காகப் பெற்றார். அதே போல் 2008ல் சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதையும் (கற்றது தமிழ்), 2011ல் சிறந்த நடிகைக்கான விஜய் விருதையும் (அங்காடித் தெரு) பெற்றார்.
இவர் நாடோடிகள் 2, சைலென்ஸ், பாவகதைகள், லிசா, சிந்துபாத், பேரன்பு, காளி, தரமணி, பலூன், மாப்ள சிங்கம், இறைவி, சகலகலா வல்லவன், வத்திகுச்சி, கலகலப்பு, அரவான், தம்பி வெட்டோத்தி சுந்தரம், எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டச்சுழி, அங்காடித் தெரு, ஆயுதம் செய்வோம், கற்றது தமிழ், சேட்டை, எங்கேயும் எப்போதும், தூங்காநகரம், கருங்காலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கிளாமர் குறித்து அஞ்சலி பேசும்போது, நான் கிளாமர் படங்களில் நடிக்க மாட்டேன் என கூறியதே இல்லை. எப்போதும் தன்னை தேடி ஹோம்லி கதாபாத்திரம் வந்ததால் ரசிகர்கள்; என்னை அப்படியே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது ஜிம்முக்கு போய் வொர்க் – அவுட் பண்ணி ஃபிட் ஆகிட்டேன். இனி துணிந்து கிளாமர் கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பேன் இதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
தன்னுடைய சித்தியின் மூலம், பல கஷ்டங்களை அனுபவித்த இவர் தற்போது இந்த பிரச்சனையில் இருந்து சிறிது சிறிதாக வெளியில் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தன் சித்தி குடும்பம் பற்றும் எதுவுமே பேச விரும்பவில்லை என கூறி தன்னுடைய குடும்பம் பற்றி கூறியுள்ளார்.
தற்போது காண்பது பொய், மதகஜராஜா, பூச்சாண்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் காணும் நம்ம அழகி அஞ்சலிக்கு நம்ம டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.





