பிரசாந்த் நடிப்பில் தெறிக்க விட்ட படங்கள்
பிரசாந்த் சிறந்த தமிழ்ப்பட நடிகர். அனைத்துக் கேரக்டர்களுக்கும் பொருத்தமானவர். ஆரம்பகாலகட்டத்தில் மென்மையான ஹீரோவாக காதல் படங்களில் நடித்தார். இவரது படங்கள் பெரும்பாலும் இளம் ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்றது. இவரைப்பற்றிய சில குறிப்புகளைப் பார்க்கலாம்.
பிரபல திரைப்பட இயக்குனர் தியாகராஜனின் மகன் தான் பிரசாந்த். தாயார் பெயர் சாந்தி. இவரது மனைவியின் பெயர் கிரகலட்சுமி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இவர் தனது தந்தை தியாகராஜனின் இயக்கத்தில் ஆணழகன், பொன்னர் சங்கர், மம்பட்டியான் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொன்னர் சங்கர் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிரசாந்த் நடிப்பில் வெளியான சில சூப்பர்ஹிட் படங்களை இங்கு காணலாம்.
வைகாசி பொறந்தாச்சு
1990ல் வெளியான இப்படத்தை ராதாபாரதி இயக்கினார். தேவாவின் தெவிட்டாத இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். இப்படம் வர்த்தக ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதே படம் இந்தியில் ஐ லவ் யூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் காவேரி ஜோடியாக நடித்தார். உடன் சுலக்சனா, கே.பிரபாகரன், ஜனகராஜ், சின்னி ஜெயந்த், சார்லி, குமரி முத்து உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்காக 1990ல் சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை பிரசாந்த் பெற்றார். ஆத்தா உன் கோவிலிலே, சின்ன பொண்ணு தான், இஞ்சி இடுப்பழகி, கண்ணே கரிசல் மண்ணு பூவே, நீலக்குயிலே, பள்ளிக்கூடம், தண்ணிக்குடம் எடுத்து, பப்பளக்கிற பளபளக்கிற பப்பாளி பழமே...ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
செம்பருத்தி
1992ல் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில், கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளியான படம் செம்பருத்தி. அறிமுக நாயகி ரோஜா படத்தில் சக்கை போடு போட்டார். இவருக்காகவே படம் பார்க்க திரையரங்கிற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். பிரசாந்த், ரோஜா உடன் மன்சூர் அலிகான், நாசர், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பழம்பெரும் நடிகை பானுமதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இன்னிசையி; பாடல்கள் அனைத்தும் சூப்பர். பட்டுப்பூவே மெட்டுப்பாடு, நடந்தால் இரண்டடி, செம்பருத்தி பூவு, சலக்கு சலக்கு, அட வஞ்சிரம், நிலா காயும் நேரம், கடலிலே எழுகிற, கடலிலே தனிமையிலே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் செம்பருத்திப்பூவு பாடலை சித்ரா, மனோ உடன் பானுமதியும் பாடியுள்ளார். கடலிலே தனிமையிலே பாடலை பிரபல இஸ்லாம் பாடகர் நாகூர் ஹனிபா பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தமிழ் செல்வன்
1994ல் வெளியான இப்படத்தை மனோஜ்குமார் இயக்கினார். பிரசாந்துடன் மதுபாலா, சிவரஞ்சனி, செந்தில், சுஜாதா, விஜயகுமார், சார்லி, சந்திரசேகர், உதயபிரகாஷ், சண்முகசுந்தரம், மோகன் நடராஜன் உள்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தனர். குயிலே இளம் மாங்குயிலே, பாட்டு எசப் பாட்டு, ஊர் தூங்கும் வேலையில், கூடு எங்கே, ஓடுங்க காளைகளே, நான் விரிச்ச வலையில், தாய்க்குலமே ஆகிய பாடல்கள் அனைத்தும் தேன் சிந்தின.
ஆணழகன்
1995ல் தியாகராஜன் இயக்கத்தில் வெளியான வெற்றி படம் ஆணழகன். பிரசாந்த், சுனேஹா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர்.விஜயா, வைஷ்ணவி, மணிவண்ணன், தாமு, காந்திமதி, வெண்ணிற ஆடை மூர்த்தி, வி.கே.ராமசாமி, டெல்லி கணேஷ், லூசு மோகன் என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது.
ராகதேவன் இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இப்படத்தில் பிரசாந்த் பெண் வேடம் போட்டு அச்சு அசல் பெண்ணாகவே மாறி கலக்கியிருப்பார். அச்சா, பச்சா, அருள் கண் பார்வை, ஏலே மச்சி, கண்ணே இன்று கல்யாண, கொஞ்சும் புறா, நில்லாத வெண்ணிலா, பூ சூடும் புன்னை, வீட்டை விட்டு துரத்தி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜீன்ஸ்
பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து ஷங்கர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம். 1998ல் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றது. காதலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். பிரசாந்த்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யாராய் நடித்தார். உடன் நாசர், ராதிகா, செந்தில், லட்சுமி ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதியுள்ளார். எனக்கே எனக்கா, கொலம்பஸ், கொலம்பஸ், பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம், கண்ணோடு காண்பதெல்லாம், வாராயோ தோழி, அன்பே அன்பே கொல்லாதே ஆகிய பாடல்கள் மனதைக் கொள்ளை கொண்டன.