More

இவர் வேற லெவல் ஹீரோ…. விஜய் சேதுபதியின் வெற்றி ரகசியம்

எதார்த்தமான நடிப்பு…எளிமையான வசனம்…இயல்பான உச்சரிப்பு…என தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு தமிழ்த்திரையுலகில் முன்னணி இடத்திற்கு வந்தவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. எந்தவித பந்தாவும் இல்லாமல்…பக்கத்து வீட்டுப் பையன் போலவும், சொந்த ஊர்க்காரர் போலவும் எளிமையான தோற்றத்தைக் கொண்டு வெள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளார் இந்த மக்கள் செல்வன். இதுதான் ரசிகர்கள் இவரது தனித்திறனுக்கு வழங்கிய செல்லப்பெயர். இவர் படத்தில் நடிக்கும் முன் கதையைக் கேட்டு உள்வாங்குகிறார். அந்தக்கதையை ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். கதையைத் தேர்வு செய்து நடிப்பதால்தான் இவர் படம் பெரும் வெற்றி பெற்று வருகிறது. தற்போது இவரது படத்திற்கு கால்ஷீட் கிடைப்பதற்கு பெரும் தட்டுப்பாடாக உள்ளது.

இவர் நடித்தால் படம் ஹிட் தான் என்ற லெவலுக்கு (இது வேற லெவல்) வளர்ந்து விட்டார். இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் நம்மை மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும் ரகமாகத் தான் இருக்கும். கலைத்தாகம் உள்ளவர்கள் இவரது யதார்த்த நடிப்பை மிகவும் ரசிக்கலாம். தென்மேற்குப் பருவக்காற்றாய் வீசிய இந்த இளந்தென்றல் பீட்சா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தது. இதற்கிடையில் இவர் எழுதிய டைரியில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். நானும் ரௌடிதான் என்று அசால்டாகப் பேசிய இவர் பெயர் தான் சேதுபதி. அதாங்க விஜய் சேதுபதி. 

2 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 3 விஜய் விருதுகளையும் வாங்கியுள்ளார். இவர் ராஜபாளையத்துக்காரர். ஆரம்பத்தில் துபாயில் கணக்காளராக பணிபுரிந்தார். அவ்வேலையில் விருப்பம் இல்லாததால் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியாற்றினார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே திரைப்பட விழாவில் பெற்றார். செல்வராகவன் இயக்கத்தின் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்திற்கு நடிகர்களைத் தேர்ந்தெடுக்க திறன் தேர்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனுஷின் நண்பராக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். 

பிரபுசாலமனின் லீ, சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல படங்களில் சிறு சிறு வேடங்களில் தலையைக் காட்டினார். சுசீந்திரன் தான் இயக்குனர் சீனுராமசாமியிடம் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தினார். பின் சீனு விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முன்னணி கதாபாத்திரத்தைக் கொடுத்தார்.  2012ல் இவர் நடித்த 3 படங்களும் மெகா ஹிட் ஆனது. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்…சூது கவ்வும்…அட அட என்ன ஒரு நடிப்பு…செமயா இருக்கு…அடிச்சு தூள் கௌப்பி ஸ்கோரை அள்ளியிருப்பார் விஜய் சேதுபதி. மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து இருப்பார்.

காதலும் கடந்து போகும், சிந்துபாத், சங்கத்தமிழன் என விஜய் சேதுபதி படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இவர் தன் பேட்டி ஒன்றில் உங்கள் படங்களின் வெற்றிக்கு என்ன காரணம் எனக் கேட்டபோது, படத்தை ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். எப்படி நடித்தால் ரசிகனுக்குப் பிடிக்கும் என்பதை ஸ்டடி பண்ணி, நாமே ஒர்க் அவுட் செய்து ரிகர்சல் எடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ஷ_ட்டிங் ஸ்பாட்டில் நடிக்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன் என்றார் வெகு இயல்பாக. 

மாதவனுடன் விக்ரம் வேதா படத்தில் நடித்து வித்தியாசமான வேடத்தை வெளுத்து கட்டுபவர் என்ற பெயரைப் பெற்றார். ஒரு கத சொல்லட்டுமா என்பதே இப்படத்தில் விஜய் சேதுபதியின் பஞ்ச் டயலாக். இப்படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்து இருப்பார். பண்ணையாரும் பத்மினியும், 96, சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் இவரது நடிப்புக்குத் தீனி போட்டவை.

கடைசியாக தளபதி விஜய் உடன் நடித்த மாஸ்டர் அதிரி புதிரி ஹிட் அடித்து விஜய்; சேதுபதியை உச்சானிக்கொம்புக்குத் தூக்கி விட்டது. படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அவருக்கு இணையான நடிப்பை படத்தில் ஈடுகட்டி நடித்து அசத்தியிருப்பார். படத்தின் வெற்றிக்கு இவர் ஒரு முக்கிய காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் விஜய் சேதுபதி. இப்போது உலக நாயகன் கமலுடன் விக்ரம் படத்திற்காக வில்லனாக நடித்து வருகிறார். 

மக்கள் செல்வனின் முத்திரை பதித்த முத்தான படங்கள் இவை. 

பீட்சா 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூக்கு இது முதல் படம். இப்படத்தை அட்டகத்தி பட தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்தார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், ஓவியர் வீர சந்தானம், சிம்கா ஆகியோர் நடித்ததிருந்தனர். கிரைம் தில்லர் கதை கொண்ட வித்தியாசமான படம். 2012ல் வெளியான இப்படத்தில் தான் தமிழில் முதன்முறையாக 7.1 சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. படத்தின் கதையை விட திரைக்கதையை எடுக்கப்பட்ட நேர்த்திதான் சிறந்தது என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது. 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 2012ல் வெளிவந்த திரைப்படம். இதை இயக்கியவர் பாலாஜி தரணீதரன். இவர் இயக்கும் முதல் திரைப்படம் இது. இதில் விஜய் சேதுபதி , காயத்ரி, விக்னேசுவரன், பகவதி பெருமாள், இராஜ்குமார் ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாக வைத்து நகைச்சுவையுடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் என்ற போதிலும் பின்னனி இசையமைத்தவர் சித்தார்த் விபின். இப்படம் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் டைட்டில்தான். அப்படி என்ன படத்தில் உள்ளது என பெரும்பாலானோரை திரையரங்கிற்கு இழுத்து வந்தது இந்த டைட்டில்தான்.

சூது கவ்வும் 

குறும்படத்தின் இயக்குனரும், டிவி தொடரின் நாளைய இயக்குனர் தொடரிலும் அறிமுகமானவர் நலன் குமாரசாமி. இவரது இயக்கத்தில் 2013ல் வெளியான படம் சூது கவ்வும். காசு பணம் துட்டு மணி மணின்னு படம் பட்டையைக் கிளப்பியது. படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் படு வித்தியாசமானது. ஆள்கடத்துபவர். ஆட்களைக் கடத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, அசோக் செல்வன், சிம்கா, ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசை அருமையிலும் அருமை. 

தர்மதுரை

தர்மதுரை 2016ல் வெளியான திரைப்படம். சீனு இராமசாமி இயக்கத்தில் வந்த இந்தப் படத்தில் விஜய் சேதுபதி  உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, தமன்னா, கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நான்காவது திரைப்படம் இது. பாடல்கள் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றது. பாடல்கள் அனைத்தும் அருமை. போலீஸ் அதிகாரி வேடம் விஜய் சேதுபதிக்கு கனகச்சிதமாக பொருந்தியது. 

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் 2019ல் வெளியான தமிழ்த் திரைப்படம். தியாகராஜன் குமாரராஜா இயக்கினார். மேலும் உதவித் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றினார்.  விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம், அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மிஷ்கின், காயத்ரி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். தமிழ்சினிமா உலகில் பலரும் ஏற்று நடிக்கத் தயங்கும் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து கலக்கிய படம் இது.

பி.எஸ். வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். நலன் குமாரசாமி, நீலன். கே. சேகர் மற்றும் மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் திரைக்கதை எழுதினர்.
மார்ச் 29, 2019 இல் வெளியான இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 2019ல் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இந்தத் திரைப்படம் பெற்றது. 

தற்போது விஜய் சேதுபதி கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts