Connect with us

80களில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நாயகர் இவர்தான்!

kallapatyti-singaram

Cinema History

80களில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவை நாயகர் இவர்தான்!

கல்லாப்பெட்டி சிங்காரம் 

4c2d4315ce76ccdf8691b67f144beab7

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் கொடிகட்டிப் பறந்துள்ளனர். அவர்களில் பல பேரை நாம் மறந்து விட்டோம். சந்திரபாபு, சுருளிராஜன், மனோரமா, வி.கே.ராமசாமி, எஸ்எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, வையாபுரி, தாமு, சந்தானம் இவர்களைத் தான் நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.

ஆனால், இவர்களைப் போல பல திறமைசாலிகள் அந்தந்த காலகட்டங்களில் மட்டுமே புகழ்பெற்று காணாமல் போய்விட்டார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவரது படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. பெரும்பாலும் கே.பாக்யராஜ் இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

f3bcbf20fbb3e0410f6c1d7876afafff

வெள்ளந்தியான முகத்தோற்றம். திருட்டு முழி, கொஞ்சம் கோவை பாஷை, ஆடு மனிதனைப் போல மிமிக்ரி செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு காந்தக் குரல் என்று தனித்துவ அடையாளத்துடன் 80களில் கோலூச்சிக் கொண்டிருந்த அந்த நகைச்சுவைக் கலைஞன் கல்லாப்பெட்டி சிங்காரத்தை எப்படி மறக்க முடியும்?

மோட்டார் சுந்தரம்பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, கதாநாயகன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சொந்தமாக நாடகக் குழு வைத்து பல நாடகங்களை மேடை ஏற்றியுள்ளார்.

பாக்யராஜ் சிங்காரமுடன் அறிமுகமான போது அவரது வெளிப்படையான அம்சங்கள், நடிப்பு மற்றும் நடை, பாடி லாங்குவேஜ் ஆகியவை அவரைக் கவர்ந்தன. தொடர்ந்து பாக்யராஜ் வெற்றிகரமாக சினிமாவில் வலம்வந்த சமயத்தில் அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

பாக்யராஜ் முதன்முதலில் சிங்காரத்தை சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் தான் கல்லாப்பெட்டி சிங்காரத்தைஅறிமுகப்படுத்தினார். பாக்யராஜூக்கும் இந்தப் படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம்.

அந்தப் படத்தில் பாக்யராஜின் அப்பாவாக கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்து இருப்பார். அடேய்…அடேய்;…அழகப்பா…இது உனக்கே அடுக்காதுப்பா….என பாக்யராஜைப் பார்த்து கோபப்படுவார்.

c56bf1f97e7ff455a13de1070799bc8a

அதிலும் கூட நமக்கு அவரது காமெடி தான் வெளியில் தெரியும். அதேபோல் அதே படத்தில் கவுண்டமணியின் தையல் கடையில் உட்கார்ந்து கொண்டு கண்ணடிச்சா வராத பொம்பளை…கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..? என்று திரும்ப திரும்ப கேட்டு விட்டு, பின்னால் நிற்கும் காந்திமதியைப் பார்த்து அசடு வழிவார்…அப்படி பயந்தபடியே ஒரு திருட்டு முழி முழப்பார் பாருங்கள்.

அந்தக் காட்சியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அப்படி ஒரு டைமிங் காமெடியை அன்றே அரங்கேற்றியவர் தான் கல்லாப்பெட்டி சிங்காரம். திருட்டு முழி போடும் நாயகர்கள் இவரிம் இருந்து தான் அதைக் கற்று இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் ஒரு தத்துவத்தை சொல்லி இருப்பார் பாருங்கள். எடுத்து ஊத்திக்கிட்டா என்ன….எறங்கி முங்குனா என்ன….எப்படியும் குளியல் ஒண்ணு தானடா…என்ற டயலாக் அவரது குரலில் கேட்கும்போது அடேங்கப்பா….என சொல்ல வைக்கும்.

கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தில் கமலை போலீஸ் வேலைக்குத் தயார் செய்யும் பொறுப்புள்ள அப்பாவாக நடித்து இருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்.

உதய கீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் அப்பாவாக நடித்து அவரையே காமெடியில் ஓவர்டேக் செய்து விடுவார்.

1979ல் இந்தப்படம் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே 1966ல் மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் சிறிய வேடம் ஒன்றில் சிங்காரம் நடித்துள்ளார்.

அத்தை மகள், மறுபிறவி, எடுப்பார் கைப்பிள்ளை, குமார விஜயம், பாமா ருக்மணி, ஒருத்தி மட்டும் கரையினிலே, மௌனகீதங்கள், அந்த 7 நாட்கள், சிம்ம சொப்பனம், டார்லிங் டார்லிங் டார்லிங், ஆனந்த கும்மி, வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன், குடும்பம், மைடியர் குட்டிச்சாத்தான், ஓசை, தராசு, சாவி, கரையை தொடாத அலைகள், காக்கி சட்டை, உதய கீதம், மருமகள், மக்கள் என்பக்கம், ராஜ மரியாதை, என் காதல் கண்மணி, கிழக்குவாசல் போன்ற படங்களில் கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்துள்ளார்.

இவரது கடைசி படம் 1990ல் வெளியான பெரிய வீட்டுப் பண்ணக்காரன். ஆனால் கிழக்குவாசல் படத்தின் டைட்டிலிலேயே அவருக்கு அமரர் கல்லாப்பெட்டி சிங்காரம் என பெயரைப் போட்டு இருப்பார்கள். படப்பிடிப்பின்போதே அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறக்கும்போது அவரது வயது 52.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top