More
Categories: latest news

தமிழ்சினிமாவில் பட்டையைக் கிளப்பிய வரலாற்றுப் படங்கள்

வரலாறு என்றாலே நமக்கு ஒரு வித ஆர்வம் வரும். அதை நாம் படித்துத் தான் இருப்போம். இப்போது பார்க்கப்போகிறோமே என்ற ஆவல் மேலோங்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அக்காலம் முதல் இக்காலம் வரை வரலாற்றுப்படங்கள் படையெடுத்து வந்துள்ளன. அவற்றில் பல படங்கள் வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளன.

Advertising
Advertising

தற்போது பொன்னியின் செல்வன் வரலாற்றுப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம்.  நாம் இதற்கு முன் வந்த சிறந்த 5 படங்களைப் பார்க்கலாம்.

மன்னாதி மன்னன்

1960ல் வெளியான படம். எம்.ஜி.ஆர், பத்மினி நடித்த இப்படத்தை நடேசன் இயக்கினார். கண்ணதாசன் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற கதையே இப்படம். அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பா, ராகினி, எம்.ஜி.சக்கரபாணி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். சேர நாட்டு இளவரசர் மணிவண்ணனாக நடித்துள்ளார்.

அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அரசர் கரிகாலச் சோழனாக நடித்துள்ளார். அஞ்சலிதேவி ராணி கற்பகவல்லியாக நடித்துள்ளார். ஜி.சகுந்தலா மங்கையர்க்கரசியாக நடித்துள்ளார். அச்சம் என்பது மடமையடா என்ற அற்புதமான பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் தூள் கிளப்பின.

கர்ணன்

மகாபாரத கதையில் உள்ள கர்ணன் கதாபாத்திரத்தை அப்படியே படமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் தெலுங்கு திரையுலக சூப்பர்ஸ்டார் என்டிஆர் கிருஷ்ணன் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதே போல் நம் தமிழ்த்திரையுலகின் நடிப்புச்சக்கரவர்த்தி சிவாஜிகணேசன் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார்.

1964ல் பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கினார். உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பிரபலமான பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது. சிவாஜி, என்டிஆர், முத்துராமன், சாவித்திரி, தேவிகா, அசோகன், வி.எஸ்.ராகவன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.

இம்சை அரசன் 23ம் புலிகேசி

புலிகேசி என்ற மன்னனின் கதை. நகைச்சுவை இழையோட மக்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர். படத்தின் இயக்குனர் சிம்பு தேவன். படத்தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கர். படத்தின் கதாநாயகன் வைகைப்புயல் வடிவேலு. அப்படி என்றால்  சிரிப்புக்கு ஏது பஞ்சம்? படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

இம்சை அரசன் 23ம் புலிகேசியாக நடித்துள்ள வடிவேலுவின் அட்டகாசங்களை இப்படத்தில் கண்குளிரக் காணலாம். அவருக்கு ஜோடியாக தேஜாஸ்ரீ நடித்துள்ளார். 2006ல் வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் சபேஷ் முரளி. ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் செம ரகங்கள்.

பொன்னர் சங்கர்

பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஒரு வரலாற்றுப்படம். அண்ணமார் சாமி கதை என்று கொங்கு வட்டாரத்தில் கூறப்படும் பொன்னர் சங்கர் என்ற இருவரின் கதை. கருணாநிதி கதை எழுதி உள்ளார்.

பிரசாந்த், பிரபு, நெப்போலியன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சினேகா உள்பட பலர் நடித்துள்ளனர். தியாகராஜன் இயக்கத்தில் 2011ல் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் பின்னணி இசை படத்தில் மிக அருமையாக இருக்கும்.

ஹேராம்

2000ல் தமிழ், இந்தி என இருமொழிகளில் இப்படம் வெளியானது. கமல்ஹாசன் கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதித்திருக்கிறார்.

இப்படம் ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கமல்ஹாசனுடன் ராணி முகர்ஜி, ஷாருக்கான், அதுல் குல்கர்னி, கிரீஷ் கர்னாட், நஸ்ருதீன் ஷா, வசுந்தராதாஸ் என பலர் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப்படத்திற்காக சிம்பொனி இசையை உருவாக்கியுள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியை எடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு அளவுக்கு அதிகமாக இடம் கொடுத்தது மகாத்மா காந்தி என்று இந்துத்வ குழுக்களால் சாகேத்ராம் மூளைச்சலவை செய்யப்படுகிறார்.

இதனால் காந்தியை வெறுக்கத் தொடங்குகிறார். மகாத்மா காந்தியைக் கொல்ல இந்துத்வா அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வாரணாசியில் துறவறம் மேற்கொண்ட அவர் காந்தியைக் கொல்ல டெல்லி செல்கிறார். ஆனால் அங்கு அவருக்கு காந்தியைப் பின்பற்றும் அம்ஜத் காந்தியைச் சந்தித்ததும் மனமாற்றம் ஏற்படுகிறது.

அடுத்து நடக்கும் சம்பவங்களில் காந்தியைக் கொல்வது யார்? சாகேத்ராம் என்ன ஆனார் என்பதை படம் விலாவாரியாக எடுத்துரைக்கிறது.

ராம் ராம், நீ பார்த்த, பொல்லாத மதன பானம், வாரணம் ஆயிரம், வைஷ்ணவ ஜனதோ, இசையில் தொடங்குதம்மா, சந்நியாச மந்திரம், ராமரானாலும் பாபரானாலும் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. இப்படத்திற்கு சிறந்த துணை நடிகர், சிறந்த உடை அலங்காரம், சிறந்த தந்திரக் காட்சிகள் என 3 தேசிய விருதுகள் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கமல்ஹாசனுக்குக் கிடைத்தது.

கோச்சடையான்

கி.பி.710 முதல் 735 வரை அரசாட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் ரணதீரன். இவனது முழு பெயர் கோச்சடையான் ரணதீரன். இவரது தந்தை பெயர் அரிகேசரி மாறவர்மன். கி.பி.710 ல் பட்டம் சூட்டியது.

சோழர்களையும் சேரர்களையும் விஞ்சி மராட்டிய மாநிலம் வரை சென்று மங்களாபுரத்தில் தனது ராஜ்ஜியத்தை நிறுவியவன் கோச்சடையான். பின் மத்தியில் ஆண்ட சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்தான். இவனது காலத்தில் நடந்த சம்பவங்கள் தான் கோச்சடையான் கதை. படத்தில் கோச்சடையானாக ரஜினிகாந்த் நடிக்க, அவரது மகள் சௌந்தர்யா படத்தை இயக்கியுள்ளார். கதை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். இப்படம் முழுக்க அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாகியுள்ளது.

2014ல் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்தார். சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, ஆதி, ருக்மணி விஜயகுமார், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Published by
adminram