நல்லா பாடி இருக்கே!.. எஸ்.பி.பியை இளையராஜா பராட்டியது இந்த ஒரு பாட்டுக்குத்தானாம்!..
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைக்க துவங்கினார். 80களில் வெளிவந்த 95 சதவீத படங்களுக்கு இசை இளையராஜாதான். இவரின் இசையை நம்பியே பல திரைப்படங்களும் உருவானது.
ஏனெனில், படங்களில் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கியமான ஒன்றாக இருந்தது. இளையராஜாவின் இசையில் பல ஆயிரம் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 80களில் ரஜினி, கமல், மோகன், ராமராஜன் என பல நடிகர்களுக்கும் பல இனிமையான பாடல்களை எஸ்.பி.பி பாடி இருக்கிறார்.
குறிப்பாக ராஜாவின் இசையில் மோகனுக்கு எஸ்.பி.பி. பாடிய எல்லா பாடல்களுமே தித்திக்கும் தேனமுதம்தான். இப்போதும் 80 கிட்ஸ்கள் காரில் பயணிக்கும்போது கேட்பது இளையராஜா - எஸ்.பி.பி - மோகன் கூட்டணி பாடல்கள்தான். இளையராஜாவும், எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
இருவருமே வாடா போடா என்றுதான் பேசிக்கொள்வார்கள். எல்லா பாடகர்களும் இளையராஜாவிடம் மரியாதையாக பேசுவார்கள். ஆனால், எஸ்.பி.பி மட்டுமே ஜாலியாக பேசி குறும்பு செய்வார். இதில், எஸ்.பி.பியை மட்டும் பெரிதாக திட்டமாட்டார் இளையராஜா. ‘டேய் பாலு குறும்பு பண்ணாம ஒழுங்கா பாடுடா.. பாட்ட முடிச்சிட்டு வீட்டுக்கு போலாம்டா’ என சொல்வதுதான் ராஜாவின் வழக்கம்.
அதேபோல், ராஜாவின் இசையில் பல அற்புதமான பாடல்களை எஸ்.பி.பி பாடி இருந்தாலும் ராஜா அவரை பாராட்டவே மாட்டாராம். இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ‘என்கிட்ட எவ்வளவோ பாடல்களை எஸ்.பி.பி பாடி இருக்கிறான். ஒருமுறை கூட ‘நீ நல்லா பாடி இருக்கே’ என நான் அவனை சொன்னதே கிடையாது.
ஆனால், ஒரு தெலுங்கு பாடலை நான் பாடி இருந்தேன். கஜல் கலந்து வரும் அந்த பாடலை தமிழில் உருவாக்கியபோது இப்படி பாட வேண்டும் என நான் அவனுக்கு சொல்லி தரவில்லை. நான் பாடிய கேசட்டை கையில் கொடுத்துவிட்டு ‘இத கேட்டுட்டு பாடு’ என சொல்லிவிட்டேன். அதை பிராக்டிஸ் செய்து அழகாக பாடினான். கேட்டு அசந்துவிட்டேன். அன்றுதான் முதன் முறையாக ‘நல்லா பாடி இருந்தடா’ என பாராட்டினேன். ‘அடப்பாவி இதை உன்னிடம் இருந்து கேட்க இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்’ என சொல்லி சிரித்தான் எஸ்.பி.பி’ என சொல்லி இருந்தார் இளையராஜா.