ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் - சாதித்துக்காட்டிய நீரஜ் சோப்ரா
டோக்கியாவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை இந்தியா 6 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கான ஒரே தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுக் கொடுத்துள்ளார் நீரஜ்சோப்ரா. இன்று நடைபெற்ற போட்டியில் 87.58 மீட்டர் எறிந்து ஒரு மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டி 1869ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தியா சார்பில் ஒரு தனி நபர் கூட தடகளத்தில் தங்கம் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா.
எனவே, அவருக்கு இந்தியா முழுவதிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், நாட்டின் உண்மையான ஹீரோ என தமிழக முதல்வர் ஸ்டாலின் நீரஜ் சோப்ராவை வாழ்த்தியுள்ளார்.
நீரஜ் சோப்ரா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, முதல் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஏழு பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.