ரஜினியோடு போட்டி போட்ட விஜய்!. நஷ்டமுன்னு சொன்னது யாரு?!.. அட தயாரிப்பாளரே சொல்லிட்டாரே!..

by ராம் சுதன் |

விஜய் அப்போதும் எப்போதும் ரஜினியின் ரசிகன்தான். அது அவருடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் மற்றும் அவரை வைத்து படமெடுத்த இயக்குனர்களுக்கு தெரியும். ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். சினிமாவில் நடிக்கும் ஆசை வர அப்பாவிடம் ஆசையை சொன்னார் விஜய்.

ஆனால், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் சினிமாவுக்கு வருவதில் விருப்பமில்லை. அவர் முடியாது என மறுக்க பல நாட்கள் அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்படி ஒருமுறை அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி எங்கோ போய்விட்டார். பதறிய எஸ்.ஏ.சி விஜயை பல இடங்களிலும் தேடினார்.

அப்போது உதயம் தியேட்டரில் ரஜினியின் அண்ணாமலை படத்தை பார்த்து கொண்டிருந்தார் விஜய். தனது நட்பு வட்டாரங்களில் ரஜினியை எப்போதும் ‘தலைவர்’ என்றே அழைப்பார் விஜய். ஆனால், டிவிட்டரில் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் விஜயின் வளர்ச்சிதான். தமிழ் சினிமாவில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் மாறி இருக்கிறார். அவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் பேச இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம், ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்க - கழுகு கதையே விஜயை மனதில் வைத்துதான் என்றும் சொல்லப்படுகிறது.

விஜய் வளரும் நேரத்தில் அவரின் சில படங்கள் ரஜினி படங்களோடு போட்டி போட்டிருக்கிறது. ரஜினியின் சந்திரமுகி படம் வெளியானபோது விஜயின் சச்சின் படம் வெளியானது. சந்திரமுகி படமோ சூப்பர் டூப்பர் ஹிட். பாபா தோல்விக்கு பின் 3 வருடம் கழித்து ரஜினி சொல்லி அடித்த திரைப்படம் இது. மேலும், சந்திரமுகியோடு வெளியான சச்சின் படம் தோல்விப்படம் எனவும் ஒரு செய்தி அப்போது வெளியானது.

இந்நிலையில், சச்சின் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஊடகம் ஒன்றில் பேசியபோது ’சச்சின் படம் இப்போது வரை இளைஞர்கள் கொண்டாடும் ஒரு படம். சந்திரமுகி படத்தோடு சச்சின் படம் வெளியானாலும் அப்படம் 200 நாட்கள் மேல் ஓடியது. சந்திரமுகி புயல் மாதிரி இருந்துச்சின்னா, சச்சின் தென்றல் மாதிரி இருந்தது. அந்த படம் எனக்கும் வினியோகஸ்தர்களுக்கும் லாபம்தான்’ என சொல்லி இருக்கிறார்.

Next Story