விஜயகாந்தை அசிங்கப்படுத்தினாங்க!. நான் அடிக்க போயிட்டேன்!.. குஷ்பு பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!...
விஜயகாந்த் மிகவும் கோபக்காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் மட்டுமல்ல. நிஜவாழ்விலும் அவர் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால் நிஜவாழ்வில் அவர் எப்படி இருந்தாரோ அப்படித்தான் அப்படித்தான் சினிமாவிலும் நடித்தார். அநியாயம் எங்கு நடந்தாலும் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார் விஜயகாந்த்.
அதுவும் அவருக்கு தெரிந்து நடிந்தால் உடனே அதை தட்டி கேட்பார். சினிமாவில் பலருக்கும் பல வகையிலும் அவர் உதவி செய்திருக்கிறார். பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதனால்தான் திரையுலகினருக்கே பிடித்த ஒரு மனிதராக விஜயகாந்த் இருந்தார்.
அதனால்தான் அவர் மரணமடைந்தபோது திரையுலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தியது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பல முக்கிய விஷயங்களை செய்தவர் விஜயகாந்த். குறிப்பாக கடனில் இருந்த நடிகர சங்கத்தை மீட்டவர் அவர். நடிகர், நடிகைகளை ஒன்று திரட்டி மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்தி அதில் வந்த பணத்தில் கடனை அடைத்தார்.
மேலும், 2 கோடி இருப்பும் வைத்தார். அவரின் மறைவுக்கு பின் இப்போதும் நடிகர் சங்கம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆனால், தீர்த்துவைக்க யாராலும் முடியவில்லை. இந்நிலையில், நடிகை குஷ்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் பற்றி பல முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை நடிகர் சங்கத்துக்கு ஒரு பிரச்சனை. அப்போது விஜயகாந்த் சார் நடிகர் சங்க தலைவராக இருந்தார். நானும் ஒரு பதவியில் இருந்தேன். மும்பையிலிருந்து சிலர் சென்னை வந்து கோடம்பாக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அவர்களை பார்த்து பேச நாங்கள் எல்லோரும் சென்றோம்.
அறையில் விஜயகாந்த் சார் அமர கூட ஒரு சேர் வைக்கவில்லை. அவர்கள் எல்லோரும் பெட்டில் சாய்ந்து கொண்டு கால் மேல் கால் போட்டு ‘இவர்லாம் ஒரு ஹீரோ’ என ஹிந்தியில் நக்கலாக பேசினார்கள். நான் அவர்களிடம் சண்டைக்கு போய்விட்டேன். விஜயகாந்த் சார் அங்கு சென்றிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், சங்கத்திற்காக அவர் அங்கு வந்தார். ’நமக்கு வேலை நடக்கணும். பொறுமையாக இரு’ என என்னை கட்டுப்படுத்தினார்’ என குஷ்பு சொல்லி இருந்தார்.