More

பேர் சொல்லட்டும்…என் பேர் வெல்லட்டும்… கமலின் கணீர்குரலில் ரசனைமிகு பாடல்கள்…

நடிகர்களில் படத்துக்குப் படம் ஏதாவது வித்தியாசம் ஒன்றை ரசிகர்களுக்கு தந்தே ஆக வேண்டும் என்ற வெறியுடன் இன்று வரை அதே துடிப்புடன் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் கமல்ஹாசன் தான். 

நன்றாக பாடக்கூடிய ஒரே நடிகரும் கமல் தான். விஜய் நன்றாகப் பாடக்கூடியவர் தான். ஆனால், கமல் போல் பாடலுக்குப்பாடல் வித்தியாசம் கொடுக்க மாட்டார். கமலை எடுத்துக் கொண்டால் வெறுமனே எளிதான பாடல்களை மட்டும் பாடியிருக்க மாட்டார். ஒரு பாடலைப் பாடும்போது இதை யார் பாடினது என்று கேட்கும் அளவாக இல்லாமல், இந்தப் பாடல் ரொம்ப சூப்பரா இருக்குதே…இதை யார் பாடியிருக்காங்க என்று கேட்கும் அளவிற்குத் தான் அவரது பாடல்கள் முழுவதும் இருக்கும். டூயட் பாடல் என்று எடுத்துக் கொண்டால், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் அவர் பாடிய நினைவோ ஒரு பறவை…அட…அட…என்ன ஒரு குரல்…என்ன ஒரு ராகம்…எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது. ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் அப்பப்போய்…அம்மம்மோய்;…ஊரா உலகமா பாடலை படுவித்தியாசமான கரகர குரலில் பாடியிருப்பார். இதில் இடையிடையே பலவித சங்கதிகளைப் புகுத்தி கலக்கியிருப்பார் கமல்.

சோகப்பாடல் வேண்டுமென்றால், நாயகன் படத்தில் இடம்பெறும் தென்பாண்டி சீமையிலெ…பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதேபோல் விருமாண்டி படத்தில் அவர் கணீர் குரலில் பாடிய ‘மாடவிளக்கே…யாரு ஒன்ன தெருவோரம் ஏத்துனா…” இந்தப் பாடலை கேட்கும்போது நம்மையும் அறியாமல் தலையாட்டிக்கொண்டே ரசிக்கத் தோன்றும்.

அந்தளவு இளையராஜாவின் இசையும் கமலின் குரலும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கும். ஹை பிட்ச் பாடல் வேண்டுமா? விக்ரம் படத்தில் விக்ரம்….விக்ரம்…விக்ரம்…என்று குரலில் மாயவித்தைகள் நிறைய செய்திருப்பார். இந்த பாடலில் ஒரு ஹீரோயிசத்தைக் காட்டியிருப்பார். பேர் சொல்லட்டும்…என் பேர் வெல்லட்டும்…என்ற வரிகளிலும் பொறுப்பது புழுக்களின் இனமே… ஆம் அழிப்பது புலிகளின் இனமே என்று துள்ளலும், எள்ளலும் கலந்து பின்னி பெடல் எடுத்திருப்பார் கமல். 

பெரும்பாலும் பாட்டுக் கச்சேரிகளில் இதுபோன்ற பாடலைப் பாட தயங்குவர். ஏனென்றால், பாடலுக்கு இடையே எத்தனையோ விதமான குரல் வித்தைகளை செய்திருப்பார் கமல். அதே படத்தில் கமல் வனிதாமணி வனமோகினி பாடலில் தொகையறாவை கமல் பாடியிருப்பார். கண்ணே தொட்டுக்கவா…கட்டிக்கவா…என்று ஒரு கிக் தரும் வசனகவிதை இது. இசைஞானியின் கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்திய படம் இது. 

அதே போல் சிங்கார வேலன் படத்தில் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி….என்ற பாடலையும் ஹைபிட்சில் பாடி அசத்தியிருப்பார். அதே படத்தில் சொன்னபடி கேளு…மக்கர் பண்ணாதே…என்ற பாடல் இடையே பல்வேறு குரல்களாக மாற்றி பாடியிருப்பார். அதேபோல் அபூர்வசகோதரர்கள் படத்தில் ராஜா கைய வெச்சா…பாடலை செம சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும்.

1975ல் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளியான அந்தரங்கம் படத்தில் வரும் ‘ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தால்’ பாடலை பாடியிருப்பார். அட அதிசயமாக இருக்கிறதே…! இவ்வளவு அற்புதமான குரல் யாருடையது என்றால், அது கமல் தான் என்பது தெரியவரும். இவ்வளவுக்கும் இந்தப்பாடல் தான் கமலின் முதல் பாடல்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் சுந்தரி நீயும்…பாடலைக் கமல் பாடியிருப்பார். பாடல் வெகுரசனையாக இருக்கும். தேவர் மகன் படத்தில் சாந்து பொட்டு…ஒரு சந்தனப்பொட்டு பாடலை எஸ்.பி.பி.யுடன் இணைந்து கமல் பாடியிருப்பார். இந்;தப்பாடலில் ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வைப்பேன்…ஹஹஹா…என்று சிரிப்பிலேயே சங்கதி போட்டிருப்பார் கமல்.

அடுத்து, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இருந்து ‘பன்னீர் புஷ்பங்களே….என்று இளம் கமலின் குரல். இந்த பாடலை கேட்கும் போது கமலின் குரல் இனிமையாக இருக்கும். பாடகராக அப்படியே மாறியிருப்பது போல் தோன்றும். மூன்றாம்பிறை படத்தில் முன்பு ஒருகாலத்துல முருங்கை மலை காட்டுக்குள்ளே…என்று ஒரு நரிக்கதைப்பாடலை அபாரமாக பாடியிருப்பார் கமல். பேர் சொல்லும் பிள்ளை படத்தில் அம்மம்மா வந்ததிங்கு செல்லக்குட்டி என்ற பாடலை அற்புதமாக பாடியிருப்பார்.

சத்யா படத்தில் இருந்து ஒரு வித்தியாசமான பாடல். ‘போட்டா படியுது படியுது’ என்ற பாடலை கமல் உச்சஸ்தாகியில் பாடியிருப்பார். எல்லா பாடகர்களாலும் இந்த பாடலை பாடமுடியாது. கமலின் குரல் இயற்கையாகவே இந்த மாதிரி பாடல்களுக்கு பொருந்தி வரும். ராஜாவின் கலக்கல் இசைக்காகவும் கமலின் குரலுக்காகவும் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும். அதேபோல் பாடிய பாடல் தான். அதேபோன்ற பாடல்தான் அஜீத் நடித்த உல்லாசம் படத்திலும்; இடம்பெற்றது. இதில் கமல் பாடிய முத்தே முத்தம்மா…முத்தம் ஒண்ணு தரலாமா…காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா…ஏய்…என்று உற்சாகம் பொங்க கமல் பாடியிருப்பார். படத்தில் அந்தப் பாடல் மட்டும் செம ஹிட். 

‘விருமாண்டி’ படத்தில் ராஜா எவ்வளவு பிரஷ்ஷா வந்தார். அடடா! கமலுக்கு தான் அதில் பாதி பெருமை சேர வேண்டும். எல்லா பாடல்களையும் கமல் பாடினாலும், கேட்க ரொம்பவே நன்றாக இருந்தது. அதில் ‘ஒன்ன விட இந்த ஒலகத்தில் ஒசந்தது’ பாடலை படத்தில் பார்க்கும் போது, அந்த இருட்டும், நிலா வெளிச்சமும் அதை இசையில் ராஜா கொண்டு வரும் போது நாமே ஏதோ நிலவொளியில் இருப்பது போல தோன்றும். ஸ்ரேயா கோஷல் தன்னுடைய லிமிடெட் உச்சரிப்பில் அழகா பாடி இருப்பார்.

மகாநதி படத்தில் எங்கேயோ திக்கு திசை காணாமல் போயாச்சே…என்ற பாடலில் விரும்பாத பல செயல்கள் செய்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனெ;று நினைத்தாயோ…என்ற மகாகவி பாடலுக்கு குரல் கொடுத்திருப்பார். கலைஞன் படத்தில் கொக்கரக்கோ கோழி பாடல் ஒரு அரிய பாடல். அதில் வரிக்கு வரி துள்ளலும் எள்ளலும் சிணுங்கலும் இருப்பதை உன்னிப்பாகக் கவனித்தால் தெரியும். தெனாலி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஆலங்கட்டி மழை பாடல் இப்படித்தான் தும்மல் போட்டெல்லாம் பாடியிருப்பார். நளதமயந்தி படத்தில் ஸ்ட்ராண்டட் ஆன் த ஸ்ட்ரீட்ஸ் என்று ஒரு பாடலைப் பாடியிருப்பார். இந்தப்பாடலை ரசிகர்கள் கேட்டிருப்பார்களா என்பதே தெரியாது. இங்கிலீஷ்காரன் போல அச்சு அசலாகப் பாடியிருப்பார்.

காதலா காதலா படத்தில் காசு மேல காசு வந்து பாடலை நையாண்டியுடன் பாடியிருப்பார். அதே படத்தில் சரவணபவ முகவடிவழகா…மடோன்னா மாடலா நீ போன்ற பாடல்களையும் அசத்தலாகப் பாடியிருப்பார். பாடலைக் கேட்கும்போதே உங்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

பிற நடிகர்களுக்காக பாடிய கமல்

கமல் பாடலைப் பாடியிருக்கிறார். தனி பாடல் என்று எடுத்துக் கொண்டால், பொன் மானை தேடுதே…என் வீணை பாடுதே என்ற பாடல். இப்பாடலை 1984ல் வெளியான ஓ மானே..மானே படத்தில் மோகனுக்காக கமல் பாடியிருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். ஒருவித புது சுகானுபவத்தை உணர்வீர்கள். அதேபோல் 1997ல் வெளியான அஜீத்துக்காக உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா பாடலைப் பாடியிருப்பார். யுவன் சங்கர் ராஜா இசையில் 2006ல் வெளியான படம் புதுப்பேட்டை. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாதிரி நெருப்பு வாயினில் என்று ஒரு பாடலை நடிகர் தனுஷ_க்காக கமல் பாடி இருக்கிறார். இந்தப்பாடலை கமல்தான் பாடினார் என்பதைத் தெரிந்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்களாம். 

பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடிய கமல் 

இசைஞானியிடம் நிறைய பாடல்களைக் கமல் பாடியிருந்தாலும், பிற இசையமைப்பாளர்களிடமும் கமல் பாடியிருக்கிறார். 

கார்த்திக் ராஜா இசையில் நீல வானம்….நீயும் நானும்…பாடலும்(மன்மதன் அன்பு), தேவிஸ்ரீபிரசாத் இசையில், ஓ..ஓ..சனம்…பாடலும்,(தசாவதாரம்) ஹிமேஷ் ரோமியா இசையில் எலே மச்சி…மச்சி பாடலும்,(அன்பே சிவம்) வித்யாசாகர் இசையில் காதல் பிரியாமல்…கவிதை வாராது பாடலும் (பஞ்சதந்திரம்), வித்யாசாகர் இசையில் நாட்டுக்கொரு சேதி சொல்லும் பாடலும்,(அன்பே சிவம்) தேவா இசையில் கந்தசாமி…மாடசாமி…பாடலும் (பம்மல் கே.சம்பந்தம்), பரத்வாஜ் இசையில் ஆழ்வார்பேட்ட ஆளுடா…பாடலும், (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) கடவுள் பாதி மிருகம் பாதி பாடலும் (ஆளவந்தான்) ஷங்கர் எஸான் லாய் இசையில் அணுவிதைத்த பூமியிலே பாடலும் (விஸ்வரூபம்), கண்ணீர் அறியா கண்களும் உண்டோ பாடலும், (உன்னைப்போல் ஒருவன்) சுருதிஹாசன் இசையில் நீயே உனக்கு ராஜா பாடலும் ஜிப்ரான் இசையில் விஸ்வரூபம் படத்தில் உன்னைக் காணாது நானிங்கு நானில்லையே பாடலின் தொடக்கத்தில் அதிநவநீதா…அபிநயராஜா கோகுலபாலா கோடிபிரகாசா…என்ற வரிகளைக் கமல் கம்பீரமான குரலில் பாடி அசத்தியிருப்பார். 

வசனப்பாடல்கள்
மகாகவி பாரதியார் தான் வசனப்பாடல்களை நிறையவே பாடியிருப்பார். அதுபோல் கமல்ஹாசனும் தனது படங்களில் பாடல்களுக்கு இடையே வசனங்களை நிறைய சேர்த்துப் பாடியிருப்பார். குணா படத்தில் கண்மணி அன்போட காதலன் நான் எழுதும் கடிதமே…பாடலைக் கேட்டால் உங்களுக்கேப் புரியும்…அதில் பாட்டாவே…படிச்சிட்டியா..ம்…அப்டினா…பொன்மணி போட்டுக்க…என்று கமல் பேசும் வசனங்கள் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்க்கும். அதே பாடலில் அவர் ஹைபிட்சில் சொல்லும் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல…அல்ல…அதையும் தாண்டி புனிதமானது…புனிதமானது என எக்கோவுடன் கமல் சொல்லும் வார்த்தைகள் அப்போதைய ரசிகர்களை தியேட்டரில் கத்தி ஆரவாரம் போட வைத்தது. 

Advertising
Advertising

அதுபோல், அபூர்வசகோதரர்கள் படத்தில் இடம்பெறும் ராஜா கைய வெச்சா பாடலின் தொடக்கத்தில் மனோரமாவுடன் இணைந்து வசனங்களில் எகத்தாளம் காட்டியிருப்பார். அதில், மனோரமா…துக்கிரித்தனமா பேசிக்கிட்டிருந்தா…துன்ற சோத்துக்குத் தாளம் தான்டா போடணும் என்று மனோரமா…சொல்ல, கமல் தாளம் போடுவார். என்னடா…சொல்லிக்கிட்டே இருக்கேன்…தாளமாடா போடுற… சொன்னதக் கேட்டுத்தான் தாளம் போடறேன்…என தாளம் போட்டுக்கிட்டே சொல்வார் கமல். ஆ…ங் கன்னம் வரைக்கும் கிழியுது..வாயி துடுக்கு…என மனோரமா சொல்ல, இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் என எகத்தாளமாக பேசுவார் கமல்…வசனம் முழுவதும் இப்படி நக்கலும், நையாண்டியுமாக கமலும் மனோரமாவும் பேசி கலகலப்பூட்டியிருப்பார்கள். 

அதேபோல் கமல் இயக்கிய ஹேராம் படத்தில் சன்னியாச மந்திரம் பாடலிலும், கமல், திரிஷா நடித்த மன்மதன் அன்பு படத்திலும் வசனக்கவிதை இடம்பெற்றிருக்கும். மன்மதன் அன்பு படத்தில் திரிஷாவும் கமலுடன் சேர்ந்து கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால் களங்கம் உள்ளவள் எச்சரிக்கை என்று வசனக்கவிதையில் பேசியிருப்பார். ராம் ராம் ஹே ஹே…ராம் ராம் என்று கமல் பாடியிருப்பார். இந்த பாடலில் அவருடன் சேர்ந்து மகள் சுருதிஹாசனும் பாடியிருப்பார். இந்த இருபாடல்களையும் எழுதியவர் கமல் தான். மன்மதன் அம்பு படத்திற்காக 4 பாடல்களை கமலே எழுதியுள்ளார்.

அவ்வை சண்முகி படத்தில் ருக்கு ருக்கு ருக்கு பாடலை வயதான பாட்டியின் குரலாக மாற்றி கமல் பாடியிருப்பது அசாத்தியமான விஷயம்தான். அதேபோல் தசாவதாரம் படத்திலும் முகுந்தா முகுந்தா பாடலில் இடையே வயதான பாட்டி குரலில் பாடியிருப்பார்.  

வித்யாசாகர் இசையில் அன்பே சிவம் படத்தில் தலைப்பு பாடல் யார் யார் சிவம்…நீ நான் சிவம்…என்ற பாடல் கமலின் மந்திரப்பாடலாகவே அமைந்து விட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் இளையராஜா ஜாஸ் என்ற புதுவித இசையை அறிமுகப்படுத்தியிருப்பார். அதில் ஏலே நீ எட்டிப்போ… என்று ஒரு பாடலை கமல் பாடியிருப்பார். இந்தப்பாடலில் பாடலை விட இசையே பெரிதும் கேட்கும். அதேபோல் ஹேராம் படத்தில் சிம்பொனி இசையை கமல் இளையராஜாவுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியிருப்பார். தனது நிறுவனம் தயாரிக்கும் படத்தில் இளையராஜாவிடமிருந்து ஒவ்வொரு பாடலையும் அவர் ரசித்து ரசித்து அவருக்கும், ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் கேட்டு வாங்கி விடுவார். அப்படி வந்த படங்களுள் ஒன்று தான் விருமாண்டி. அவ்வளவு ரசனை மிக்கவர் கமல். இந்தப் படத்தில் கமலே 4 பாடல்களைப் பாடியிருப்பார். அந்தக் காண்டாமணி ஓசை கேட்கையிலே…, அன்னலெட்சுமி…ஆகிய பாடல்களும் இதில் அடங்கும். கொம்புல பூவ சுத்தி…என்ற பாடலை கமலும், இளையராஜாவும் சேர்ந்து பாடியிருப்பர். இது 24 பிட் சாங். 

இன்னும் வெளிவராத கமலின் கனவுப்படமான மருதநாயகத்தில் கமல் எழுதிய சக்கை போடு போடும் ராசாங்கம்…பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இன்று வரை தூண்டிவிட்டுள்ளது. 

இன்னும் வரவிருக்கும் சபாஷ்நாயுடு மற்றும் விக்ரம் 2 படங்களைப் பொருத்தவரை குரலில் என்னென்ன மாயவித்தைகள் செய்யப்போகிறாரோ கமல்…!என்று தான் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு நிலவி வரும். 

தொகுப்பு: வே.சங்கரன்

Published by
adminram

Recent Posts