தலைவர் படத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.. மம்முட்டியிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்!
மலையாள உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 3 முறை தேசிய விருதையும், ஏழு முறை கேரளா மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்தான் இதுவரை அதிகமுறை (7) தேசிய விருதை வென்றுள்ளார். இதையடுத்து மம்முட்டி, கமல் தலா 3 முறை வென்றுள்ளனர். இதுதவிர ஃபிலிம்பேர் விருது உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார் மம்முட்டி.
சமீபத்தில் இவர் தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் இவரைப்பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களை சினிமா பிரபலங்கள் பகிர்ந்துகொண்டனர். அந்தவகையில் மம்முட்டியை வைத்து சுமார் 40 படங்களுக்கும் மேல் இயக்கிய இயக்குனர் ஜோஷி மம்முட்டி பற்றிய சில சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது, 'எனது மகள் விபத்தில் சிக்கி இறந்த சமயத்தில், நான் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டேன். அந்த நேரத்தில் மம்முட்டி என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டார். ஷூட்டிங்கிற்கு செல்லும்போது என்னையும் காரில் அழைத்து செல்வார்.
பின்னர் ஷூட்டிங் முடிந்ததும் என்னை வீட்டில் விட்டுத்தான் செல்வார். ஒருநாள், இருநாள் அல்ல ஒருமாதம் இவ்வாறு செய்தார். இவரைப்போல் ஒரு நண்பர் கிடைத்தது நான் செய்த பாக்கியம். ஒருநாள் சென்னையில் என்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது மம்முட்டியை இயக்குனர் மணிரத்னம் சந்தித்து, தளபதி படத்தின் கதையை கூறி நடிக்குமாறு கேட்டார். ஆனால், மம்முட்டி அதை மறுத்துவிட்டார். தற்போது தமிழ்நாட்டில் உங்களுக்கு அந்த அளவிற்கு ரீச் இல்லை, ரஜினியுடன் நடித்தால் தமிழ்நாட்டில் அனைத்து ரசிகர்களையும் சென்றடைவீர்கள் என்றேன். இதையடுத்து மறுநாளே தளபதி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்' என கூறினார்.