மாதவன் நடிப்பில் மாஸ் ஹிட் படங்கள்
மாதவன் தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகர்களுள் ஒருவர். யதார்த்தமான நடிப்பு இவரது பிளஸ் பாயிண்ட். தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத்திறன் பெற்றவர். 4 முறை பிலிம்பேர் விருதுகள், 3 தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மாதவன் நடிப்பில் வெளியான முதல் படம் அலைபாயுதே. கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படம் இவருக்கு அதிரடி வெற்றியைத் தேடித் தந்தது.
டும்டும்டும் என்ற படம் இவரது திரைப்பட வாழ்க்கையில் பெரிய மைல்கல்லானது. தாய்க்குலங்கள், கல்லூரிப் பெண்கள் என மாதவனுக்கு ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது. கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, குரு ஆகிய படங்களில் மாதவனின் நடிப்புத்திறமையைக் காணலாம்.
ஜார்க்கண்ட்டில் 1.6.1970ல் பிறந்தார். இவரது முழு பெயர் ரங்கநாதன் மாதவன். மற்றொரு பெயர் மேடி. தந்தையின் பெயர் ரங்கநாதன். இவர் டாட்டா ஸ்டீல் நிர்வாக நிர்வாகியாக இருந்தார். இவரது தாயார் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளர். சரிதாவுடன் 1999ல் திருமண வாழ்க்கையை மேற்கொண்டார்.
மாதவன் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதற்கு முன்பே இண்பெர்னோ என்ற ஆங்கில படத்தில் நடித்து திரையுலக வாழ்க்கையில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாதவனின் செம மாஸான படங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
அலைபாயுதே
2000ல் மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் தான் மாதவன் அறிமுகமானார். அவருடன் ஷாலினி, சொர்ணமால்யா, அரவிந்த சாமி, விவேக், பிரமிட் நடராஜன் உள்பட பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். இது ஒரு காதல் கதை. சிநேகிதியே, காதல் சடுகுடு, எவனோ ஒருவன், யாரோ யாரோடீ, என்றென்றும் புன்னகை, செப்டம்பர் மாதம், பச்சை நிறமே ஆகிய பாடல்கள் மனதை கொள்ளை அடிக்கின்றன.
என்னவளே
2000ல் வெளியான இப்படத்தை ஜே.சுரேஷ் இயக்கினார். மாதவன், சினேகா, சார்லி, மணிவண்ணன், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். அடி காதல் என்பது, சின்ன சின்ன சுகங்கள், ஒவ்வொரு பாடலிலும், ரா ரா ராஜகுமாரா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மின்னலே
2001ல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம். இதுதான் கௌதம் மேனனுக்கு முதல் படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் சூப்பர். மாதவன், ரீமா சென், அப்பாஸ், விவேக், நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. இதே படம் இந்தியிலும் மாதவன் நடிப்பில் ரீமேக் ஆனது. படத்தில் இடம்பெற்ற வசீகரா என் நெஞ்சினிக்க பாடல் செம மாஸ் ஆனது. அழகிய தீயே, ஒரே ஞாபகம், மடி மடி, நெஞ்சைப் பூப்போல், ஓ மாமா மாமா, வேறென்ன வேறென்ன, வெண்மதி வெண்மதியே நில்லு...ஆகிய பாடல்கள் செம ரகங்கள்.
ரன்
சாக்லெட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம். 2002ல் வெளியான இப்படத்தை லிங்கு சாமி இயக்கினார். மாதவன், மீரா ஜாஸ்மின், ரகுவரன், விவேக், அதுல் குல்கர்னி உள்பட பலர் நடித்துள்ளனர். மாதவனுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. மீரா ஜாஸ்மின், விவேக் ஆகியோருக்கும் பிலிம்பேர் விருது கிடைத்தது. வித்யாசாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். காதல் பிசாசே, பொய் சொன்னால், அழகிய திமிருடன், இச்சுத்தா இச்சுத்தா, மின்சாரம் என் மீது, ஒருமுறை அவர் விழி, பனிக்காற்றே பனிக்காற்றெ, பிரியா பிரியா, தேரடி வீதியில் தேவதை ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இறுதிச்சுற்று
சுதா கொங்கரா இயக்கிய இந்தப்படம் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளர். 2016ல் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாதவன், ரித்திகா சிங, முமதாஜ், நாசர், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக நாயகி ரித்திகா சிங் முதல் படத்திலேயே சிறப்பாக நடித்துள்ளார். இதற்காக இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தன. வா மச்சானே, உசுரு நரம்புலே, ஏய் சண்டக்காரா உள்பட பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகங்கள். இந்த படம் மாதவனுக்கு மேலும் 1 படி முன்னேற உதவியது.