தலைப்பை மாத்து!. இல்லனா போராட்டம் நடத்துவோம்!.. பராசக்திக்கு வந்த பிரச்சனை!..

by சிவா |
தலைப்பை மாத்து!. இல்லனா போராட்டம் நடத்துவோம்!.. பராசக்திக்கு வந்த பிரச்சனை!..
X

Sivakarthikeyan: இதுவரை காமெடி கலந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயேன் அமரன் திரைப்படம் மூலம் சீரியஸான கதைகளிலும் தன்னால் நடித்து ஸ்கோர் செய்ய முடியும் என நிரூபித்து காட்டினார். இந்த படம் 300 கோடி வசூலை தொட்டது. மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதை இது.

அமரன்: சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக வசூல் பெற்ற திரைப்படமாக அமரன் இருக்கிறது. எனவே, அவரின் சம்பளமும் அதிகரித்திருக்கிறது. இதற்கு 40 கோடி முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்கிய அவர் இப்போது 70 கோடி கேட்கிறாராம். அதோடு, தொடர்ந்து நல்ல கதைகளிலும், பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ்: ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பாதி முடிந்து அப்படியே நிற்கிறது. அதற்குள் சல்மான்கானை வைத்து ஹிந்தியில் சிக்கந்தர் என்கிற படத்தை இயக்கப்போய்விட்டார் முருகதாஸ். வருகிற மார்ச் மாதத்திற்குள் அப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளார்.

புறநானூறு: அந்த இடைவெளியில்தான் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டார். அது சூர்யா நடிப்பதாக அறிவித்து டிராப் ஆன புறநானூறு திரைப்படம். கதைகளில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்ல அதை சுதாகொங்கரா ஏற்கவில்லை. அதனால் சூர்யா அதிலிருந்து விலகிவிட இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

அதோடு இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் அதர்வா போன்றவர்களும் நடித்து வருகிறார். புறநானூறு என்கிற தலைப்பு சூர்யாவிடம் இருப்பதால் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்துள்ளனர். இது சிவாஜி முதன் முதலில் அறிமுகமான திரைப்படத்தின் பெயர். அதோடு, தமிழ் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஒரு புரட்சியை உருவாக்கிய திரைப்படம்.

இந்நிலையில், இந்த தலைப்பை வைக்கக் கூடாது என சிவாஜி சமூகநலப் பேரவை எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பராசக்தி என்கிற தலைப்பை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. படக்குழு இதை ஏற்பார்களா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Next Story