பராசக்தி தலைப்பை கொடுக்க முடியாது!..இப்படி ரவுண்டு கட்டுறாங்களே!.. எஸ்.கே.25 பரிதாபங்கள்!...

Parasakthi: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் டிராப் ஆகிவிட அந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு போனது. இது 1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை என சொல்லப்படுகிறது. இது சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்துவிட்டது.
சிவகார்த்தியன் மட்டுமில்லாமல் இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாகவும், அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலாவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு சொல்லாமலே இருந்தார்கள். 1965, பராசக்தி என பல தலைப்புகள் வெளியே பேசப்பட்டது.
விஜய் ஆண்டனி: ஒருவழியாக இப்படத்திற்கு பராசக்தி என்கிற தலைப்பையே அறிவித்து டீசரை வெளியிட்டனர். ஆனால், இவர்கள் வெளியிடும் முன்பே விஜய் ஆண்டனி தனது நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ என்கிற படம் தெலுங்கில் பராசத்கி என்கிற தலைப்பில் வெளியாகிறது என அறிவித்து போஸ்டரை வெளியிட்டார். எனவே, பராசக்தி என்கிற தலைப்பு யாருக்கும் போகும் என்கிற குழப்பம் ஏற்பட்டது.
சிவாஜியின் பராசக்தி படத்தின் தலைப்பு ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்ததாகவும், சிவாஜியின் குடும்பம் மற்றும் ஏவிஎம் நிறுவனம் ஆகியவற்றிடம் முறையாக அனுமதி வாங்கியே சுதாகொங்கரா பராசக்தி தலைப்பை பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்தது. எனவே, பராசக்தி படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் ஆண்டனியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், சிவகார்த்திகேயன் படம் தமிழ், தெலுங்கில் பராசக்தி எனவும், விஜய் ஆண்டனியின் படம் தமிழில் சக்தி திருமகன், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பராசக்தி எனவும் வைத்துக்கொள்ளலாம் என சுமூகமாக பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சுதா கொங்கரா தரப்பு பெருமூச்சுவிட்டது.
நேஷனல் பிக்சர்ஸ்: இந்நிலையில், ‘எங்களுக்கு முழு உரிமை உள்ள பராசக்தி தலைப்பை யாரும் பயன்படுத்த அனுமதி இல்லை. ஏனெனில், பராசக்தி படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என பராசக்தி படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
சிவாஜி நாடகங்களில் நடித்துவந்தபோது அவருக்கு முதலாளியாக இருந்த பெருமாள் முதலியார்தான் இந்த நிறுவனத்தை துவங்கி பராசக்தி கதையை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட்டார். ‘இந்த படத்திற்கு சிவாஜி வேண்டாம், வேறு ஹீரோவை போடலாம்’ என ஏவிஎம் சொன்னபோது ‘சிவாஜி இல்லையேல் இந்த படம் இல்லை’ என சொன்னவர்தான் பெருமாள் முதலியார். இவரை தனது தெய்வம் என்றே பேட்டிகளில் நடிகர் திலகம் சொல்லுவார். இவரின் நிறுவனம்தான் இப்போது பராசக்தி தலைப்புக்கு கட்டையை போட்டிருக்கிறது. எனவே, அடுத்து இவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.