
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை கதற விடுபவர். தயாரிப்பாளர் நஷ்டமடைந்து தலையில் துண்டை போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் அடுத்த படம் எடுக்க கிளம்பிவிடுவார்.

விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கியவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பல மாதங்களாகவே மும்பையில் தங்கி ஷாருக்கானுக்கான கதையை உருவாக்கி வந்தார். பல கரெக்ஷனுக்கு பின்னார் கதை இப்போது ஓகே ஆகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. படம் எப்படியும் தமிழ்,தெலுங்கு மொழிகளில் டப் செய்ய வாய்ப்புண்டு. நயன்தாரா கதாநாயகி என்றால் தென் இந்திய சினிமா ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள் என்பதை கணக்குப்போட்டு ஷாருக்கானே நயன்தாராவை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.

அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் நயன்தாராதான் கதாநாயகி. அதுமட்டுமில்லாமல் நயன் இதுவரை பாலிவுட் பக்கம் சென்றதில்லை. அதிலும் ஷாருக்கானுக்கு ஜோடி என்றால் அவர் மறுப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இப்படத்தில் நடித்தால் இந்திய சினிமா ரசிகர்களிடையே அவர் பிரபலமாகிவிடுவார். எனவே, ஷாருக்கான் – நயன்தாரா இணைந்தால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.,





