Cinema News
மெட்ராஸ் படத்தை வேணா சொந்தம் கொண்டாடிக்கோ!.. பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்த பேரரசு!..
இயக்குனர் பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு இயக்குனர் பேரரசு சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவின் போது பதிலடி கொடுத்த வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில் கொதித்தெழுந்து திமுகவை கடுமையாக பா. ரஞ்சித் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும்போது, நாங்க தான் மெட்ராஸ் என அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இயக்குனர் மோகன். ஜி நீங்கதான் மெட்ராஸ்னா அப்போ நாங்க எல்லாம் யாரு என்கிற கேள்வியை முன்வைத்து பா. ரஞ்சித்துக்கு பதிலடி கொடுத்திருந்தார். மோகன். ஜியை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சினிமா விழாவில் இயக்குனர் பேரரசு பா. ரஞ்சித் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக தங்கலான் படம் வெளியாக காத்திருக்கிறது. சியான் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் அந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் அந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா விழாவில் பங்கேற்றுப் பேசிய பேரரசு செய்தியாளர்களை சந்தித்த போது, அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு மெட்ராஸ் படம் வேண்டுமானால் பா ரஞ்சித் சொந்தம் கொண்டாடலாம், மெட்ராஸை சொந்தம் கொண்டாட அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
சென்னை என அழைக்கப்படும் இந்த நகரத்தில் அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வருகின்றனர். நாங்கதான் மெட்ராஸ் என்றால் அந்த நாங்க யாரு, சாதியத் திணிப்பை தான் பா. ரஞ்சித் பேசுகிறாரா? அப்படி பேசியிருந்தால் அது மிகவும் தவறானது என பேரரசு கூறியுள்ளார்.