பாரதிராஜாவுக்கு என்னாச்சுன்னு நினைக்க வைத்த கதாநாயகி...! போட்டோவைப் போட்டுடாதீங்க..ன்னு சொன்ன இயக்குனர்
'கலையரசி' என்று கலைஞரால் பாராட்டப்பட்ட ராதிகா இன்று தன் நடிப்பாற்றலால் எப்படி இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவர் முதன் முதலாக அறிமுகமான 'கிழக்கே போகும் ரயில்' படத்துக்கு நான் தான் பத்திரிகை தொடர்பாளர் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இதுகுறித்து அவர் மேலும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
ராதிகா தான் கதாநாயகி. அவர் மேட்டுப்பாளையத்துக்குப் படப்பிடிப்புக்குக் கிளம்புறாங்க. அதே ரெயிலில் தான் பாரதிராஜாவும் பயணிக்கிறாரு. அவர்களை வழி அனுப்புவதற்காக நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்கிறேன். ராதிகா தான் கதாநாயகி என்ற செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்து விடலாமான்னு கேட்டேன்.
'செய்தியை வேணும்னா போடு. ஆனா போட்டோவைப் போட்டு விடாதே'ன்னு சொன்னார். அதற்குக் காரணம் அப்போது ராதிகா கொஞ்சம் குண்டாக இருந்தார். அதனால நான் பத்திரிகைகளுக்கு புகைப்படம் கொடுக்கவில்லை. அப்போது நான் எழுதிய திரைக்கதிர் பத்திரிகையில் மட்டும் புகைப்படத்தை வெளியிட்டேன்.
ராதிகாவைப் பார்த்ததும் படப்பிடிப்பில் இருந்த எல்லாருக்கும் அதிர்ச்சி. பாரதிராஜாவுக்கு என்னாச்சு..? இவரைப் போய் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளாரே என்ற கேள்வி பட உதவி இயக்குனர் பாக்கியராஜிக்குக் கூட எழுந்தது.
அப்போது டி.ஆர்.ராஜகுமாரி அறிமுகமான போது அவரை அறிமுகப்படுத்திய தமிழ்த்திரை உலகின் பீஷ்மர் கே.சுப்பிரமணியம். அப்போது அவருக்கு மேக்கப் போட கூட மேக்கப் மேன் மறுத்து விட்டாராம்.
ஆனால் அதற்குப் பின் தமிழ்சினிமா உலகில் எப்படிப்பட்ட உயரத்தை அடைந்தார் என்பது தமிழ்சினிமா உலகமே வியந்தது. அதே போலத் தான் ராதிகாவும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்துக்கொண்டு இருக்கிறார்.
பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். வாழ்க்கையில் பல சோதனைகளைத் தாண்டித் தான் இப்படிப்பட்டவர்கள் ஜெயித்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் ராதிகா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிக்க பாரதிராஜாவின் இயக்கத்தில் 1978ல் வெளியான படம் கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தில் சுதாகர், ராதிகா, உஷா உள்பட பலர் நடித்துள்ளனர். ராதிகா அறிமுகமான படம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை. கோவில் மணியோசை, மாஞ்சோலைக் கிளி தானோ, பூவரசம் பூ பூத்தாச்சு, மலர்களே ஆகிய பாடல்கள் உள்ளன. முதல் படமே 1 வருடத்தைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.