புதுப்பாடகனுக்குப் பிறகு தாணுவுடன் இணையாத விஜயகாந்த்… பிரிவுக்கு இதுதான் காரணமா?

Published on: July 17, 2024
---Advertisement---

விஜயகாந்த் தமிழ்த்திரை உலகின் கேப்டன். அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இன்னும் அவர் புகழ் நிலைத்தே இருக்கிறது. தயாரிப்பாளர் தாணுவும் விஜயகாந்தும் முதலில் இணைந்த படம் கூலிக்காரன். இதுதான் விஜயகாந்தை வைத்து தாணு தயாரித்த முதல் படம். அதன் வெற்றியைத் தொடர்ந்து தாணு விஜயகாந்தை வைத்து எடுத்த படம் நல்லவன். அந்தப் படமும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் ஒரு படத்தை இணைந்து பண்ணலாம் என பேசிக் கொண்டார்கள். ஆனால் கடைசியாக அவர்கள் இணைந்தது புதுப்பாடகன் படத்தில் தான். அந்தப் படமும் விஜயகாந்துக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பிறகு ஆண்டுதோறும் விஜயகாந்த் தன்னோட படத்தைத் தயாரிப்பவர்கள் யார் யார் என தன் உதவியாளரிடம் லிஸ்ட் எடுக்கச் சொன்னாராம். அப்படி உதவியாளர் எடுத்த லிஸ்டில் தாணுவின் பெயர் இல்லையாம். அதைப் பார்த்ததும், தாணுவின் பெயர் இதில் இல்லையே. அவர் கோபித்துக் கொள்வாரே என விஜயகாந்த் தன் உதவியாளரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உதவியாளர், தாணு அண்ணன் தானே… அவராகவே வரட்டும். பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட, விஜயகாந்தும் அப்படியா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். அதன்பிறகு என்ன காரணமோ தெரியவில்லை. தாணுவின் தயாரிப்பில் விஜயகாந்த் நடிக்கவே இல்லையாம். பூந்தோட்டக் காவல்காரன் படத்தைக் கூட தாணு தான் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் அது என்ன காரணத்தாலோ நடக்கவில்லை.

.தாணுவின் தயாரிப்பில் அதன்பிறகு விஜயகாந்துக்குப் படங்கள் வரவில்லையே தவிர இருவரும் நல்ல நண்பர்கள். விஜயகாந்தைப் பற்றி எந்த இடத்திலும் தாணு விட்டுக்கொடுக்காமல் தான் பேசுவாராம். அவர் இறந்த பிறகு கூட விஜயகாந்துக்கு வந்த கூட்டம் எம்ஜிஆருக்கு வந்ததை விட அதிகம். அதற்குக் காரணம் மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு தான் என்றாராம். விஜயகாந்த் கட்டிய கல்யாண மண்டபத்தில் முதல் கல்யாணமே தாணுவின் மகனுடையது தான் என்றால் அவர்களுக்குள் எந்த அளவு நட்பு இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1987ல் தாணு தயாரிக்க, ராஜசேகர் இயக்கிய கூலிக்காரன் படம் வெளியானது. 1988ல் தாணு தயாரிக்க எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் நல்லவன். 1990ல் தாணு தயாரித்து இயக்கிய புதுப்பாடகன் படம் வெளியானது. 1988ல் விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடித்த படம் பூந்தோட்ட காவல்காரன். லியாகத் அலிகான் கதை, திரைக்கதை எழுத, செந்தில் நாதன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment