தமிழில் ஒரு ஹாலிவுட் படம் 'புலன் விசாரணை' - மறக்க முடியாத தமிழ் சினிமா!
திரைப்பட கல்லூரி மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்கிய முதல் திரைப்படம் புலன் விசாரணை. விஜயகாந்த், சரத்குமார், ஆனந்தராஜ், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழகத்தையே பீதியில் ஆழ்த்திய ஆட்டோ சங்கர் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்.
ஆனால், முழுக்கதையும் அதுவாக இல்லாமல் மும்பையில் உள்ள பெரிய மருத்துவமனை, அதில் உறுப்புகளை திருடும் மருத்துவராக சரத்குமார் என ஹாலிவுட் ரேஞ்சுக்கு திரைக்கதை அமைத்திருந்தார் ஆர்.கே.செல்வமணி. ஆக்ஷன் கிரைம் திரில்லர் வகையை சேர்ந்த இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. வழக்கம்போல் விஜயகாந்த் ஆக்ஷனில் தூள் கிளப்பியிருப்பார். தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். விஜயகாந்திற்கு துணையாக வரும் நாய்க்கு கூட படத்தில் முக்கிய காட்சிகளை ஆர்.கே.செல்வமணி அமைத்திருந்தார்.
இப்படத்தில், சரத்குமாரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருந்தார் விஜயகாந்த். சென்னையில் காணாமல் போகும் இளம்பெண்களை கொலை செய்து அவர்களின் உடலை சுவற்றில் வைத்து பூசி மறைக்கும் மிரட்டலான காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தது. இதை துப்பறிந்து கண்டறியும் வேடத்தில் விஜயகாந்த் அசத்தியிருப்பார்.
அதன்பின் இதற்கெல்லாம் மூளையாக விளக்கும் சரத்குமாரை மும்பை சென்று அவரின் மருத்துவமனையில் நுழைந்து கண்டுபிடித்து மாஸ் காட்டியிருப்பார் விஜயகாந்த். அந்த மருத்துவமனையில் அவருக்கு உதவும் வேடத்தில் நடிகை ரூபினி நடித்திருப்பார். இறுதி காட்சியில் விஜயகாந்தும் , சரத்குமாரும் மோதும் சண்டை காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
வழக்கம்போல் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இளையராஜா அசத்தியிருந்தார். ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை, திரைக்கதை அமைத்து தமிழில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் என ரசிகர்களை கொண்டாட வைத்தார் ஆர்.கே.செல்வமணி. இப்படம் 1990ம் வருடம் வெளியானது. தற்போது 30 வருடம் முடிந்துவிட்டது. ஆனால், அப்படத்திற்கு பின் இப்போதுவரை புலன் விசாரணை திரைப்படம் போல ஆக்ஷன் கிரைம் திரில்லர் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டிருக்கவில்லை.