
சாஹோ படத்துக்குப் பின்னர் பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்திருக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். சாஹோ படத்தைத் தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகின்றனர்.
பீரியட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இத்தாலியில் படத்தின் பெரும்பகுதி ஷூட் செய்யப்பட்ட நிலையில், ஒரு சில காட்சிகள் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின், துணை நடிகர்கள் என படத்தில் நடிக்கும் கலைஞர்களின் காஸ்ட்யூம் பெரிய அளவுக்குப் பேசப்படும் என்கிறார்கள். ரொமாண்டிக் டிராமா ஜானரான இந்தப் படத்தின் காஸ்ட்யூமுக்கு மட்டுமே தயாரிப்பு நிறுவனம் 6 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இது சினி உலகில் பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
