’தர்பார்’ திரைவிமர்சனம்: ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த பொங்கல் விருந்து

மும்பையில் ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்டு 17 போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். இதற்கு காரணமான போதை கும்பல் தலைவனை பிடிக்க மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பதவியேற்றதும் போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதி மகளை காப்பாற்றியதோடு அந்த கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரையும் இனம் கண்டுபிடித்து கைது செய்கிறார்

இந்த நிலையில் போதை கும்பல் தலைவனின் மகன் தான் இதற்கு காரணம் என்பதை அறியும் ரஜினி அவரையும் கைது செய்கிறார். தனது மகனை காப்பாற்ற அந்த தொழிலதிபர் அதிகாரத்தை பயன்படுத்துவதும்  அதனை ரஜினி முறியடிப்பதும் தான் இந்த படத்தின் முதல் பாதி கதை. இதனை அடுத்து இரண்டாம் பாதியில் அந்த தொழிலதிபரின் மகன் உண்மையில் அவரது மகன் இல்லை என்றும் சர்வதேச அளவில் போதை மருந்து கடத்தல் செய்யும் சுனில் ஷெட்டியின் மகன் என்று தெரிந்தபிறகு சுனில் ஷெட்டி களத்தில் இறங்க, அவரை எப்படி ரஜினி சமாளிக்கிறார் என்பதுதான் இரண்டாம் பாதி கதை 

படம் முழுக்க ரஜினி ரஜினி என்று சொல்லுமளவுக்கு மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி செல்கிறார் ரஜினிகாந்த். நயன்தாராவுடன் ரொமான்ஸ் நிவேதா தாமஸ் உடன் சென்டிமென்ட் யோகிபாபுவுடன் காமெடி மற்றும் மிடுக்கான அதிரடி போலீஸ் அதிகாரி, வில்லத்தனமான என்கவுண்டர், மனித உரிமை கமிஷன் தலைவரையே மிரட்டும் தொனி ஆகியவை இந்த 70 வயதிலும் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்து இன்னும் தான் ஒரு சூப்பர் ஸ்டார்தான் என்பதை ரஜினி நிரூபித்துள்ளார்

ரஜினிகாந்த் ஜோடியான நயன்தாராவுக்கு கொடுத்த வேலையை மிகவும் குறைவு என்றாலும் கொடுத்த வேலையை அவர் சரியாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிவேதா தாமஸூக்கு சிறப்பான வேடம். கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அனைவரையும் தனது நடிப்பால் கவர்கிறார். ஏ.ஆர் முருகதாஸின் முதல் பாதி திரைக்கதை மிகவும் விறுவிறுப்பு. அதே வேகத்தில் இரண்டாம் பாதியும் இருந்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக சுனில்ஷெட்டி கேரக்டர் மிகவும் வீக் என்பது படத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு. அனிருத்தின் இசை, பாடல்கள், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பு

மொத்தத்தில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு பொங்கல் விருந்தாக உள்ளது இந்த தர்பார்

Published by
adminram