ரஜினியின் கொடி பறக்குது பிளாப் ஆக இதுதான் காரணம்... பிரபலம் சொன்ன லேட்டஸ்ட் தகவல்
பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் பாரதிராஜாவும், சூப்பர்ஸ்டாரும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் கொடிபறக்குது. அதன் காரணமாகவே அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்தப் படத்துக்கு முதலில் பாரதிராஜா உருவாக்கிய கதை வேறு. சமீபத்தில் இதுகுறித்து தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்தப் படத்தின் கதாசிரியரான ஆர்.செல்வராஜ்.
பிரதமருடைய பாதுகாப்புப் படையில் முக்கியமான அதிகாரியாக இருக்கிறான் கதாநாயகன். அவனுக்கு ஒரு அழகான காதலி. அந்தப் பெண்ணின் நோக்கம் எல்லாம் பிரதமரை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்பது தான்.
இந்த விஷயம் கதாநாயகனுக்குத் தெரியாது. அவன் அந்தப் பெண்ணைத் தீவிரமாகக் காதலிக்கிறான். ஒரு கட்டத்தில் இது தெரிய வர பிரதமரின் பாதுகாப்புப் படையில் சேர்ந்ததே அவரைத் தீர்த்துக் கட்டத்தான் என்கிற பழி கதாநாயகனின் மேல் விழுகிறது. அந்தப் பழியில் இருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, பிரதமரையும் எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் கொடிபறக்குது படத்துக்கு பாரதிராஜா முதலில் தேர்ந்தெடுத்த கதை.
இந்தக் கதையைக் கேட்டு 'இது நல்லாருக்கு. படமாக்குங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு செல்வராஜ். அப்போது அவர் வேறொரு படப்பிடிப்புக்காக வெளியூருக்குச் சென்று விட்டார். 2 மாதங்கள் கழித்து மீண்டும் வரும்போது கொடிபறக்குது படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது.
படத்தை செல்வராஜூக்குப் போட்டுக் காட்டினாங்க. படத்தைப் பார்த்து விட்டு பாரதிராஜாவின் இயக்கம் பிரமாதமா இருக்கு. ரஜினியின் நடிப்பு பிரமாதமா இருக்கு. கண்ணனின் ஒளிப்பதிவும் பிரமாதம். ஆனா கதை அது எங்கேன்னு கேட்டாராம். பாரதிராஜா முதலில் சொன்ன கதை தான் எடுத்திருப்பார் என்று நினைத்த செல்வராஜூக்கு அது இல்லன்னதும் பெரிய ஏமாற்றமாகி விட்டது.
ஆனால் நீண்ட நாள்களுக்குப் பின் அந்தக் கதையைக் கேட்ட யாரோ சில பேர் அவங்க நல்லா இல்லன்னு சொன்னதும் அந்தக் கதையை மாற்றி விட்டார் என்ற செய்தி செல்வராஜூக்குத் தெரிய வந்தது.
கதை எங்கிட்ட சொல்லிவிட்டு நல்லாருக்கா, படமாக்கலாமான்னு கேட்டுவிட்டு, கதையை மாற்றுவதற்கு முன்னால எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்க வேண்டாமான்னு செல்வராஜ் ஆதங்கப்பட்டாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ரஜினி, அமலா நடித்த இந்தப் படத்தில் தான் சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு பாடல் உள்ளது. மணிவண்ணன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹம்சலேகா இசை அமைத்துள்ளார்.