More

ஜோசியத்தை நம்பி மோசம் போன ராமராஜன்… சொந்த காசில் சூனியம் வைக்கிறது இதுதானா?….

மக்கள் நாயகன், பசுநேசன் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர் ராமராஜன். கரகாட்டக்காரன் உட்பட இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடியது. இவரின் கால்ஷீட் கிடைக்க தயாரிப்பாளர்கள் தவமிருந்தனர். ஏகப்பட்ட பெண் ரசிகைகளை கொண்ட நடிகர். இவரின் வளர்ச்சியை கண்டு ரஜினி, கமலே பொறாமை அடைந்த காலம் உண்டு. ஆனால், தற்போது சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வருகிறார். உதவி இயக்குனர், நடிகர், இயக்குனர், காதல் திருமணம், வெள்ளி விழா நாயகன், மனைவியுடன் விவாகரத்து என அவர் கடந்து வந்த பாதைகள் ஏராளம். 

Advertising
Advertising

ராமராஜன் என்கிற குமரேசன்  எம்.ஜி.ஆர் வெறியனாய் மதுரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் . மறைந்த இயக்குனர் ராம.நாராயணனிடம் இரண்டாவது உதவியாளராக இருந்த போது தான் பணிபுரியும் படங்களில் நளினியை பார்த்திருக்கிறார். பார்த்தவுடனே காதல் ஏற்பட்டது ராமராஜனுக்கு.  மூர்த்தி என்கிற நடன இயக்குனருக்கும், ப்ரேமா என்கிற டான்சருக்கும் பிறந்தவர் நளினி. சிறு வயதிலேயே நளினியை நடிகையாக்க வேண்டும் என்றே தீர்மானித்தனர். நளினியின் இயற்பெயர் ராணி….

அவரை முண்ணனி நடிகையாக ஆக்கவேண்டும் என்பதில் அவரது குடும்பத்தினர் கடும் முயற்சி செய்தனர்.  ஒன்பதாவது படிக்கும் போது நளினி ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட். 

நளினியில் குடும்பத்தில் அப்பா, அம்மா, ஆறு சகோதரர்கள், ஒரு சகோதரிக்கும் சாப்பிட நளினியின் நடிப்பு தான் வழியாகி போனது…நளினியின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் குமார். அண்ணி  சாந்தி குமார். மலையாள முண்ணனி டான்ஸ் மாஸ்டர். நளினி தொடர்ந்து ராமநாராயணனின் படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப்படங்களிலெல்லாம் ராமராஜன் தான் கன்டினியூட்டி எழுத வேண்டும். ஷாட் முடிந்ததும் நளினியைபார்த்து தோடு, ஷர்ட், செருப்பு என எல்லாம் எழுதினார் ராமராஜன்..ஒருமுறை நளினி அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் உடையில் விழுந்து விட்டார் ராமராஜன்..

“நாளைக்கும் இதே ஷர்ட் போட்டு வர முடியுமா?”

அடுத்த நாள் அதை மறந்தே போன நளினி யதேச்சையாக அதே ஷர்ட் போட்டு வர ராமராஜன் தன் மனக்கோட்டையை கட்டத் தொடங்குகிறார்..ஒரு படப்பிடிப்பிகில் நளினி கையில் படத்துக்காக மருதாணி இட்டிருக்க கோவிலுக்கு போய்விட்டு வந்த ராமராஜன் ‘குங்குமம் எடுத்துக்கோங்க’ என சொல்ல நளினியோ  ‘கையில் மருதாணி.. நீங்களே வச்சி விடுங்க’ எனச்சொல்ல காதல் அரும்பி இருக்கிறது.

நளினியின் வருமானத்தை நம்பிய குடும்பம் அவரை ராமராஜன் பக்கம் செல்ல விடாமல் தடுத்துக்கொண்டே இருந்திருக்கிறது. அம்மா சற்றும் விலகாது கூடவே இருந்திருக்கிறார். நளினியின் டச்சப் பெண்ணிடம் கடிதம் கொடுத்து அனுப்புகிறார் ராமராஜன்.. வீட்டுக்கு அரசல் புரசலாக தெரிய வருகிறது. நீ செத்தாலும் சாவு. ஆனால் இந்த காதலை ஏற்க மாட்டோம் என நளினி குடும்பம் காவலுக்கு நிற்கிறது. 

ராமராஜனுக்கு டைரக்டர் வாய்ப்பு கிடைக்க அவர் படம் இயக்கத் தொடங்குகிறார். நளினியை ஷூட்டிங்குக்காக 86 ம் வருடங்களில் கேரளா, ஆந்திரா என ஒப்புக்கொண்டு மாநிலம் மாநிலமாக செல்கிறார்கள் நளினி குடும்பம்.

இந்நிலையில் ராமராஜனுக்கு 86ல் நாயக வாய்ப்பு வருகிறது…’நம்ம ஊரு நல்ல ஊரு’ செம ஹிட். அடுத்து வந்த எங்க ஊரு பாட்டுக்காரனோ சூப்பர்ஹிட். நன்றாக சம்பாதிப்பதால் இனி பெண் தருவார்கள் என எஸ்.எஸ்.சந்திரன், சந்திரசேகர் துணையுடன் நளினி வீட்டுக்கே போய் பெண் கேட்கிறார் ராமராஜன். நளினியின் சகோதரர்கள் ராமராஜனை அங்கேயே வெளுத்து விடுகிறார்கள்.ராமராஜனின் மேல் விழுந்து சினிமா போலவே அடியை வாங்கிக்கொள்கிறார் நளினி. 

87ல் ஒரு நாள் பலரின் துணையோடு ஷுட்டிங்கிலிருந்து எஸ்கேப்பாகிறார் நளினி. கண்ணைக்கட்டி கொண்டு போய் ஒரு வீட்டில் வைத்து தாலி கட்டுகிறார் ராமராஜன்…ராஜனும், ராணியும் வாழ்வில் இணைய….விஷயம் எம்.ஜி.ஆர் வரை செல்கிறது. அவரே எல்லா செலவும் ஏற்று ரிஷப்ஷனை நடத்துகிறார். நளினியின் வீட்டிலிருந்து யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை…

ராமராஜன் திருமணத்துக்குப்பின் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார். இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. நளினிக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் வாரி வழங்குகிறார். தன் படங்களில் ராசா-ராணி என வார்த்தை வரும்படி பாடல்கள் வைக்கிறார். ‘தானா வந்த சந்தனமே’ பாடலில் ‘ராணி இந்த ராணி.. இந்த ராஜனோட விருப்பமே’….போன்ற வரிகளெல்லாம் ராமராஜன் நளினிக்காக சேர்த்த வரிகள் என சிலாகிக்கிறார் நளினி.

ராமராஜன் ஜோசியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்தவர். அவருக்கு சினிமா இறங்கு முகமாக இருக்க ஜோசியக்காரர் இத்தனை நாள் நல்ல செய்திகளை சொன்னவர் நளினியை பிரிந்தாலே பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் என சொல்ல பிரிய முடிவெடுக்கிறார்.

நளினியை சம்மதிக்க செய்து அவர் விரல்களை பிடித்துக்கொண்டே கண்கலங்க பிரிகிறார்கள் இருவரும். இறுதியாக நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்த போது, நீதிமன்றத்திற்கு வெளியே நளினி மயங்கி விழுந்தார். அவரை தாங்கிப்பிடித்து முதலுதவி செய்து ராமராஜன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். நளினி மீது அவருக்கு இருந்து அன்பு எப்போதும் மாறவே இல்லை. ஆனால், காதலித்த கணவருக்காக அவர் கேட்ட விவாகரத்தையும் கொடுத்து விட்டு தனிமையில் வாழும் நளினியின் காதல் பல மடங்கு பெரிது அல்லவா… 

நளினிக்கு அவர் அம்மா ‘நீ திரும்பித்தான் வருவாய்’ என இட்ட சாபம் பலித்துவிட்டது போல என தோன்றுகிறது….

ராமராஜனின் குழந்தைகள் படித்து மகன் வங்கியில் பெரிய பதவியிலும், மகள் பெரிய பதவியிலும் வெளிநாட்டில் இருக்கின்றனர். நடிக்கவேகூடாதென வந்த நளினி திரும்பவும் ‘கிருஷ்ணதாசி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக மாறிப்போனார். அவ்வப்போது சினிமாவில் தலை காட்டி வருகிறார். மகன், மகளோடு நல்ல அன்பு கொண்ட ராமராஜன் இருவரின் திருமணத்துக்கும் வந்து தந்தையின் கடமையை செய்துவிட்டார்.

ஜோசியத்தை நம்பித்தான் ராமராஜன் நளினியை பிரிந்தார். ஆனால், மனைவியை பிரிந்த பிறகு தான் திரையுலகிலிருந்து மறைந்து விட்டாரோ என தோன்றுகிறது. அவர் நளினியை பற்றி இதுவரை எந்த குற்றமும் சொல்லாமல் மௌனியாக வாழ்கிறார். தான் நடித்த எல்லா படத்திலும் நாயகனாகவே நடித்த ராமராஜன் அந்த எண்ணத்திலிருந்து கீழே இறங்கினால் இனியும் திரையில் காணலாம்…..

அதாவது, ஹீரோவாகத்தான் நான் நடிப்பேன் என்பதை விட்டு அவர் இறங்கிவந்தால், இப்போதும் அவரை அரவணைக்க தமிழ் சினிமா உலகம் காத்திருக்கிறது..ஆனால், ‘அண்ணன், மாமா, சித்தப்பானு நடிக்கமாட்டேன். கரகாட்டகாரன் படம் போதும். அதை பார்த்தே வாழ்ந்துடுவேன்’ என்று விகடனுக்கு பேட்டி கொடுத்த ராமராஜன் தற்போது வரை அந்த முடிவிலிருந்து மாறவில்லை…

ராமராஜன் இப்போதும் எவர் க்ரீன் ஹீரோவாக வாழ்கிறார்!….

Published by
adminram

Recent Posts