ரீவைண்ட்-சீமான் எழுதி மணிவண்ணன் இயக்கிய ராசா மகன் திரைப்படம்
1994ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ராசா மகன். இந்த படத்தை இயக்கியவர் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன். இந்த படத்தின் கதையை எழுதியவர் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் . சீமானின் கதை என்றாலும் புதிய அரிதான கதை என்று சொல்லிவிட முடியாது இரு குடும்பத்துக்கு உள்ள பிரிவுகள் அதனால் ஏற்படும் வருத்தங்கள். நாயகன் நாயகி ஒன்று சேர முடியாமல் தடங்கல் என பல படங்களில் பார்த்த கதைதான் இருந்தாலும் கதை சொல்லப்பட்ட விதம் மற்ற காட்சியமைப்புகள், பாடல்கள், வசனம், நகைச்சுவை என அனைத்தும் சென் டி மெண்டான இந்த படத்தை கொஞ்சம் கலகலப்பாக்கி கொடுத்தன.
குறிப்பாக இப்படத்தில் நடித்த பிரசாந்த், சிவரஞ்சனி ஜோடி ரசிகர்களுக்கு மிக பிடித்த ஜோடியாக கருதப்பட்டது. இவர்கள் இருவரும் வரும் காதல் காட்சிகளில் அவ்வளவு ஒரு கிறக்கம் நெருக்கம் ரொமான்ஸ் இருந்தது. சிவரஞ்சனியின் கவர்ச்சி கலந்த நடிப்பால் அந்த நாட்களில் சிவரஞ்சனி, ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சந்திரசேகர், ரேகா, வினுச்சக்கரவர்த்தி என பெரிய நகைச்சுவை பட்டாளங்கள் இருந்தாலும், ஊருக்குள்ள கெடுதல் செய்யும் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் மணிவண்ணனின் ஆண்டை கதாபாத்திரமே பெரிதும் பேசப்பட்டது.
ஆண்டைக்கு உதவியாளராக வரும் அல்வா வாசுவின் கேள்விகளும் மணிவண்ணனின் நக்கல் கலந்த பேச்சும் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. சொல்லப்போனால் மணிவண்ணனின் அமைதிப்படை படத்தில் வரும் நக்கல் நையாண்டிகள் போல இந்த படத்திலும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தன.
இவர்களோடு இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தராஜனும் சேர்ந்து கொள்ள இவர்கள் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் அப்ளாஷ் அள்ளியது. மணிவண்ணனும் நக்கல் கலந்த கோயமுத்துர் குசும்பு ஆசாமி. இயக்குனர் சுந்தர்ராஜனும் கோயம்புத்தூர் குசும்பு உள்ளவர் இவர்கள் சந்தித்தால் கேட்கவும் வேண்டுமோ. அரசியல் ஆன்மிகம், மூட நம்பிக்கை என ரத்தக்கண்ணீர் எம்.ஆர் ராதா ரேஞ்சுக்கு மணிவண்ணன் பேசும் ஒவ்வொரு வசனங்களும் ரசித்து சிரிக்க வைத்தன. இந்த படம் பெரிய வெற்றியை பெறாதாதால் மணிவண்ணன் பேசிய வசனங்கள் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் பேசப்படாமலே போனது. ஆனால் இந்த படத்தில் மணிவண்ணன் நடிப்பை பார்த்தால் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் என்பது உண்மை.
படத்தின் பலம் வழக்கம்போல இளையராஜாதான். பொம்பளைய செய்ய வந்த, தூளி மணி என சுனந்த பாடிய பாடல் அஞ்சுகஜம் காஞ்சிப்பட்டு, வைகாசி வெள்ளிக்கிழமை தானே என எஸ்.பி.பி பாடிய பாடல், காத்திருந்தேன் தனியே உள்ளிட்ட பாடல்கள் செம்ம ஹிட் ஆகின. அதிலும் காத்திருந்தேன் தனியே என்ற பாடல் மிக மிக அருமையாக வந்திருந்தது. இளையராஜாவிடம் இசைக்கலைஞராக பணிபுரியும் சந்திரசேகர் என்பவர் அந்த பாடலை பாடி இருந்தார். மிக அற்புதமான பாடல் அது. இந்த படத்தின் பாடல்களில் இளையராஜா ஒரு இசைவேள்வியே நடத்தி இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றும் இந்த படம் பார்த்தாலும் குடும்பம், செண்டி மெண்ட், காதல், நகைச்சுவை, கவர்ச்சி, பாடல்கள் என அனைத்தும் கலந்து கட்டி ரசிக்கும் வகையிலே இந்த படம் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.