More

இளையராஜாவும் வைரமுத்துவும் ஏன் பிரிந்தார்கள்?… வெளிவராத தகவல் இதோ!…

தமிழ் சினிமா இசையை கட்டி ஆண்டவர் இளையராஜா என்றால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள். இப்போதும் கூட அவரின் பாடல்கள் பலருக்கும் ஆறுதலாய், மன காயத்திற்கு மருந்தாய், நிம்மதியாய் இருக்கிறது. 80களில் இவரின் பாடல்களுக்காவே திரைப்படங்கள் ஓடிய காலமுண்டு. 

இயக்குனர் பாரதிராஜாவும், இளையராஜாவும் வாடா போடா நண்பர்கள். இருவரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ஏனெனில், அப்படி பாராதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்திற்கு பாடல் எழுத வந்தவர்தான் வைரமுத்து. அப்படத்தில் அவர் எழுதிய  ‘பொன்மாலைப்பொழுது’ பாடல் செம ஹிட். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதினார். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் மண் வாசனை, காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களில் முத்தான பாடல்கள் ரசிகர்களுக்கு கிடைத்தது.

ஆனால், திடீரென இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் இருவரும் தற்போது வரை இணையவே இல்லை. பாராதிராஜவும் ரஹ்மான் பக்கம் செல்ல பாரதிராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி உருவானது. 

இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என்கிற கேள்வி பல ரசிகர்களின் மனதில் இருக்கிறது. அதற்கான விடை இதோ:

முதல் மரியாதை படத்தில்தான் இருவருக்கும் பிரச்சனையே துவங்கியது. இளையராஜா தான் இசையமைக்கும் பாடல்களில் அவருக்கு பிடிக்காத வரிகளில் மாற்றம் செய்யும் பழக்கமுடையவர். சொல்வது இளையராஜா என்பதால் பாடலாசிரியர்களும் அதை ஏற்றுக்கொள்வதுண்டு. வைரமுத்துவும் பலமுறை அதை ஏற்றதுண்டு. ஆனால், ‘முதல் மரியாதை’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்காற்று திரும்புமா’ பாடலில் ‘மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல’ என ஒருவரி வைரமுத்து எழுதியிருப்பார். இந்த வரி இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. எனவே, அதை மாற்றுமாறு வைரமுத்துவிடம் அவர் கூற, வைரமுத்துவோ அதை மாற்ற வேண்டும் என எனக்கு தோன்றவில்லை. இயக்குனர் பாரதிராஜா சொல்லட்டும் எனக் கூற இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.

உண்மையில் இந்த சம்பவத்தால்தான் இளையராஜவுக்கும், பாரதிராஜாவுக்குமே உரசல் ஏற்பட்டது. அதாவது, இளையராஜவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது அவர் யார் பக்கம் சாராமல் பொதுவாக இருந்து இருவரையும் சமாதானம் செய்ய முயன்றது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதன்பின்னர் ‘கடலோர கவிதைகள்’ படத்திற்கு மூவரின் கூட்டணியிலும் பாடல் வெளிவந்தது. அதன்பின் கார்த்தி நடித்த ‘நாடோடி தென்றல்’ படத்தில் ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே மீண்டும் உரசல் ஏற்பட்டது. எனவே, வைரமுத்து அப்படத்திலிருந்து வெளியேறினார்.  

அந்த சம்பவத்திற்கு பின் வைரமுத்துவும், இளையராஜாவும் இணையவில்லை. அதேபோல், ‘நாடோடி தென்றல்’ படத்திற்கு பின் பாரதிராஜா படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. எனவே, தனது படங்களில் அம்சலேகா, மரகதமணி, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என வெவ்வேறு இசையமைப்பாளர்களை பாராதிராஜா இசையமைக்க வைத்தார். ஆனால், அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதினார். கடைசிவரை அவர் வைரமுத்துவை விட்டு செல்லவில்லை. இதுதான் ராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. ஆனாலும், சில இடங்களில் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட பகைப்படங்கள் வெளியானது. ஆனால், ராஜாவும், வைரமுத்துவும் கடைசி வரை இணையவே இல்லை.

வைரமுத்து தன் ஈகோவை விட்டு தனது இரண்டு மகன்களின் திருமணத்திற்கும் ராஜாவுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தார். ஆனால், அதில், ராஜா கலந்து கொள்ளவில்லை. 

காலம்தான் எவ்வளவு கொடியது!…
 

Published by
adminram

Recent Posts