சிம்பு 49 மட்டுமில்ல.. சிம்பு51 வது படத்துக்கும் இவர்தான் இசை.. இதுதான் நெப்போட்டிசமா?

சாய் அபயங்கர்: தற்போது எங்கு பார்த்தாலும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பற்றிய பேச்சுதான் அடிபட்டு வருகிறது. இன்னும் அவர் இசையில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் நான்கு படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது கல்லூரியில் படித்து வரும் சாய் அபயங்கர் இசையின் மீதுள்ள ஆசையில் ஒரு சில ஆல்பம் பாடல்களை பாடியிருக்கிறார். அதன் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார்.
தெறிக்க விட்ட ஆல்பம் பாடல்: அந்த வகையில் கட்சி சேர ஆல்பம் பாடலை கொடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் சாய் அபயங்கர். அதுவரை இப்படி ஒரு பாடலை யாருமே எதிர்பார்க்கவில்லை. டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இப்போது வரைக்கும் இந்தப் பாடலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. அதற்கடுத்த படியாக ஆசை கூட பாடலையும் வெளியிட்டார். இதுவும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது.
இப்படி ஆல்பம் பாடலாலேயே தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் சாய் அபயங்கர். இவர் பிரபல பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் தான். இன்னும் தொடர்ந்து ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறார். அனிருத்துடன் இணைந்து ஒரு சில படங்களில் பணியாற்றவும் செய்திருக்கிறார். இதற்கிடையில் லோகேஷ் திரைக்கதையில் லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சாய் அபயங்கர்.
அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு முதலில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க வேண்டியது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ரஹ்மான் விலகி சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்திற்கும் இவர்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
சிம்பு 49 மற்றும் 51: இந்த நிலையில் சிம்புவின் 49வது படம் குறித்த அப்டேட் சமீபத்தில்தால் வெளியானது. இந்தப் படத்தை ராம்குமார் பாஸ்கரன் இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கும் சாய் அபயங்கர்தான் இசையமைக்கப் போகிறார். அதுமட்டுமில்லால் அவருடைய 51 வது படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளர் என்று சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல் வெளியானது நெட்டிசன்கள் இதுதான் நெப்போட்டிசமா? சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால் எந்தவொரு திறமையும் அறியாமல் இப்படி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஒப்பந்தம் செய்கிறார்கள் என்றால் இங்கு நெப்போட்டிசம்தான் வேலை செய்கிறது என்று கூறி வருகிறார்கள்.