ஷங்கர் இயக்கத்தில் மிரட்டிய பிரம்மாண்ட படங்கள்..!
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான் நம் நினைவுக்கு வருகிறது. மேலும் அவரது படங்கள் எல்லாமே மாஸ் ஹிட் கொடுத்தவை தான். இவர் தமிழில் ஜென்டில்மேன் படத்தில் தான் இயக்குனராக அறிமுகமானார். இவரது வாழ்க்கைக் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் ஷங்கர் 17.8.1963 -இல் கும்பகோணத்தில் பிறந்தார். இவர் இயக்குனராவதற்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். எஸ்.பிக்சர்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 ஆகிய படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவை. காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி, வெயில், கல்லூரி, அறை எண் 305ல் கடவுள், ஈரம், ரெட்டை சுழி ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். இவரது பிரம்மாண்டமான படைப்புகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
ஜென்டில்மேன்
1993ல் ஷங்கர் இயக்கிய முதல் படம் இது. அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, நம்பியார், கவுதமி, செந்தில், வினீத், பிரபுதேவா, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
ஒட்டகத்தைக் கட்டிக்கோ, பார்க்காதே பார்க்காதே, உசிலம்பட்டி பெண்குட்டி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலு, என் வீட்டு தோட்டத்தில் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இந்தியன்
ஷங்கர் இயக்கிய இப்படத்தில் இரட்டை வேடமேற்ற கமலின் அசகாய நடிப்பானது பார்ப்பவர்களை மிரள வைத்தது. 1996ல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியானது. கமலுடன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, நாசர், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.
லஞ்சத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பின்னணி இசை பின்னி எடுக்க பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
அக்கடான்னு நாங்க, மாயா மச்சீந்திரா, பச்சைக்கிளிகள், டெலிபோன் மணிபோல், கப்பலேறிப் போயாச்சு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவாக வரும் கமல் பிரத்யேகமாக மேக் அப் போட்டு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அந்நியன்
;ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வந்த மற்றுமொரு சூப்பர்ஹிட் படம். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இப்படத்தின் இசை ஹாரிஸ் ஜெயராஜூக்குச் சென்றது. விக்ரம், சதா, விவேக், பிரகாஷ்ராஜ், யானா குப்தா, நாசர், கலாபவன் மணி, நெடுமுடி வேணு உள்பட பலர் நடித்துள்ளனர். பிரெஞ்சு மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதல் இந்தியத்திரைப்படம் இதுதான்.
பலதரப்பட்ட மனோபாவத்துடன் கூடிய ஒழுங்கின்மை நோய் தான் படத்தின் கதைக்கரு. அதாவது அந்நியன் கெட்டப்பில் வரும் விக்ரம் அம்பி எனும் அய்யராகவும், அந்நியன் என்ற கொலை வெறித் தாக்குதல் நடத்துபவனாகவும் மாறி மாறி மனநிலையைக் கொண்டு வந்து நடிப்பில் மிரட்டும் நோய். இதை விக்ரம் கனகச்சிதமாக அச்சு பிசகாமல் செய்து அசத்தியிருப்பார். இதற்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வந்தனர். குமாரி, காத் யானை, கண்ணும் கண்ணும் நோக்கியா, அய்யங்காரு வீட்டு அழகே, அண்டங்காக்கா கொண்டைக்காரி ஆகிய பாடல்கள் பட்டையைக் கிளப்பின.
எந்திரன்
ரோபோவானது தானாகவே சிந்திக்கத்தக்க வகையில் செயற்கை நுண்ணறிவு பெற்று இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் கதைக்கரு. படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடமிட்டு அசத்தியிருப்பார். ரோபாவாகவும், விஞ்ஞானியாகவும் வேடமிட்டு இருப்பார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்காகவே படத்தை பலமுறை பார்க்கலாம்.
மற்றொரு அம்சம் பிரம்மாண்டம். 2010ல் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்;.ரகுமான் இசையில் வெளியான படம் இது. கலாநிதி மாறன் தயாரிப்பில், பாலகுமாரன், சுஜாதா, சங்கர் ஆகியோர் கதை எழுதினர். புதிய மனிதா, காதல் அணுக்கள், இரும்பிலே ஒரு இதயம், சிட்டி டான்ஸ், அரிமா, அரிமா, கிளிமாஞ்சாரோ, பூம் பூம் ரோபோட் டா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோட்கள் நடத்தும் கிராபிக்ஸ் சாகசம் செம மாஸ்.
நண்பன்
2012ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முற்றிலும் மாறுபட்ட படம். படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன், அனுயா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டன. ஆல் இஸ் வெல் என்பதே இப்படத்தின் தாரக மந்திரம்.
இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் வெளியானது. படம் செம சூப்பர். என் பிரண்டப் போல யாரு மச்சான், ஆல் இஸ் வெல், அஸ்க்கு லஸ்கா அம்மோ அம்மோம், எந்தன் கண் முன்னே, ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி, நல்ல நண்பன் ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் திட்டப்படி வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ்ப்படம் இது தான்.
நம்ம டீம் சார்பாக ஷங்கருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.