தனுஷின் கர்ணனுக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு – என்ன செய்யப்போகிறது படக்குழு  ?

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு சிவாஜி ரசிகர்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு கர்ணன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவாஜி கணேசன் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படம் 1964 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த பெயரை சூட்டுவதற்கு சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது சம்மந்தமாக தயாரிப்பாளர் தாணுவுக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில் ‘தங்கள் தயாரிப்பில்கர்ணன்என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக்கர்ணன்திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம். பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’ எனத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இது போன்ற பிரச்சனை எழுந்தபோது நவீன சரஸ்வதி சபதம் எனவும் திருவிளையாடல் ஆரம்பம் எனவும் பெயர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தகக்து.

Published by
adminram