தனுஷ் பாணியில் ‘வெந்து தணிந்தது காடு’… தேசிய விருதை குறி வைக்கிறாரா சிம்பு?….

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இது சிம்புவின் 47வது திரைப்படமாகும்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இப்படத்திற்கு பாரதியாரின் பாடல் வரிகளில் ஒன்றான ‘வெந்து தணிந்தது காடு’ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிம்பு இதுவரை பார்த்திராத தோற்றத்தில் நிற்கிறார். இந்த போஸ்டர் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

திரைத்துறையில் தனுஷுக்கும், சிம்புவுக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். தனுஷுக்கு முன்பே நடிக்க வந்தவர் சிம்பு. சிறு வயதிலேயே கதையின் நாயகனாக பல ஹிட்களை கொடுத்தவர். ஆனால், எப்போதும் மாஸ் ஹீரோவாக கமர்ஷியல் மசாலா திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுபவர். ஆனால், தனுஷ் அப்படி இல்லை. துவக்கம் முதலே காதல் கொண்டேன், புதுப்பேட்டை என அவருக்கு படங்கள் அமைந்தது. 

எனவே, சிறந்த நடிகராக அவர் பார்க்கப்பட்டார். ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் திரைப்படங்களிலும், ஒரு பக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருபவர். தனுஷின் நடிப்பை கண்டு வியந்த பாலிவுட் மற்றும் ஹாலிவுட் இயக்குனர்களே அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்படுகின்றனர். இதுவரை 3 பாலிவுட் திரைப்படங்களிலும், சில ஹாலிவுட் படங்களிலும் தனுஷ் நடித்துவிட்டார். தற்போது கூட ‘The gray man’  என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஆனால், சிம்புவோ தமிழ் சினிமாவை தாண்டி செல்லவில்லை. இதுவரை விருதுகளை பெற்றதில்லை. தற்போது அவர் நடிக்கவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் போஸ்டரை பார்க்கும் போது இப்படம் அவரின் நடிப்புக்கு தீனி போடும் கதை என கருதப்படுகிறது. இப்படம் சிம்புவுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் என அப்படக்குழுவினர் கூறி வருகிறார்கள். இப்படத்தில் அவர் வெட்டியான் கதாபாத்திரத்தில் நடிப்பார் என கருதப்படுகிறது. போஸ்டரைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், பாலா இயக்க வேண்டிய படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். எனவே, இப்படத்தை கவுதம் மேனன் எப்படி ரசிகர்களுக்கு கொடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இப்படத்தின் போஸ்டரை பார்த்த சிம்பு ரசிகர்கள் தனுஷுக்கு ‘அசுரன்’ போல் சிம்புவுக்கு இப்படம் அமையும் என பதிவிட்டு வருகின்றனர். சிம்பு ஒரு சிறந்த நடிகர். அவரது நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமையவில்லை கவுதம் மேனன் முன்பு ஒருமுறை கூறியிருந்தார். எனவே, இப்படம் அப்படி ஒன்றாக அமைந்தால் மகிழ்ச்சியே!. 

விருதுகள் பெறட்டும் சிம்பு…
 

Published by
adminram