
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். தனுஷுடன் ‘3’ மற்றும் சில படங்களில் சின்ன வேடங்களில் நடித்தார். அவரை ‘மெரினா’ திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆக்கினார் இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின் சில திரைப்படங்கள் நடித்தாலும் ‘எதிர் நீச்சல்’ திரைப்படம் அவரை முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது.
அதன்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களின் வெற்றி அவரை பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாற்றியது. தற்போது இவர் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதேபோல், டான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் இருக்கிறாள். கனா படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார். 10 மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மீண்டும் கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு இன்று மகன் பிறந்துள்ளான். இந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் ‘18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்’ என பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.





