இப்ப உங்களை யாரு முதலமைச்சர் ஆக சொன்னா?!.. எம்.ஜி.ஆரிடமே கேட்ட சிவக்குமார்!....
சத்யராஜின் சித்தப்பா மகள்கள் இருவருக்கும் அடுத்தடுத்த நாள்களில் கோவையில் திருமணம் நடந்தது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல எம்ஜிஆர் விமானத்தில் பயணித்தார். அப்போது அதே விமானத்தில் பயணிக்கக்கூடிய வாய்ப்பு சிவக்குமாருக்குக் கிடைத்தது.
முதல் வரிசையில் எம்ஜிஆர், அவரது மனைவி வி.என்.ஜானகி, அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் இருந்தனர். அது பெங்களூரு வழியாக கோவை செல்லும் விமானம்.பெங்களூருவில் தரையிறங்கியதும் முத்துச்சாமி, சிவக்குமார் அருகில் வந்து 'உங்க அண்ணன் தானே முன்னாடி உட்கார்ந்துருக்காரு. பக்கத்தில் வந்து பேசுங்க'ன்னு எம்ஜிஆர் அருகில் உள்ள சீட்டில் சிவக்குமாரை உட்கார வைத்தார்.
இப்போது எம்ஜிஆர் அருகில் உட்கார்ந்து பேசக்கூடிய வாய்ப்பு சிவக்குமாருக்குக் கிடைத்தது. 'நீங்க ஏன் முதல் அமைச்சரா ஆனீங்க?'ன்னு எம்ஜிஆரிடம் கேட்டார். ‘ஏன் என்ன பிரச்சனை?’ என சைகையால் எம்ஜிஆர் கேட்க, நான் இப்போது மணிவண்ணன் இயக்கத்தில் 'இனி ஒரு சுதந்திரம்' என்று ஒரு நல்ல படத்தில் நடிச்சிருக்கேன்.
அதை உங்களுக்குப் போட்டுக் காட்டணும்னு ஆசைப்படறேன். ஆனா அப்படி போட்டுக் காட்டுறதுக்கு உங்கக் கிட்ட தேதி வாங்க எவ்வளவு கஷ்டப்படுறேன்னு தெரியுமா? செகரட்டரிக்கிட்ட தேதி வாங்கணும். எவ்வளவு பிரச்சனை இருக்கு' என சிவக்குமார் அங்கலாய்த்தார்.
உடனே தன் மனைவி பக்கத்தில் திரும்பிய எம்ஜிஆர், 'தம்பி எப்போ படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறானோ அப்ப நான் அந்தப் படத்தைப் பார்க்கிறேன்னு அவன்கிட்ட சொல்லு' என்றார். 'கல்யாணம் முடிஞ்சி ஊருக்குப் போனதும் படம் பார்க்குறோம்'னு அவரிடம் ஜானகி சொன்னார்.
முதல் அமைச்சர் ஆனதும் கூட எம்ஜிஆர் கலைஞர்களிடம் எந்தளவு பாசமாக இருந்தார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.