என் பெயரை யாருமே அப்படி கூப்பிட்டது இல்லை!.. கமல் சந்திப்பு பற்றி நெகிழும் எஸ்.ஜே.சூர்யா..

by ராம் சுதன் |   ( Updated:2024-07-20 09:36:50  )
SJ Suryah
X

SJ Suryah

சினிமா உலகம் ஒருவருக்கு வாய்ப்பை எப்படி கொடுக்கும்? எப்படி எடுக்கும்? என எதையுமே சொல்ல முடியாது. கீழே இருப்பவர்களை மேலேயும், மேலே இருப்பவர்களை கீழேயும் கொண்டு போகும். ஒருவரை பார்க்க முடியுமா என ஏங்கிய ஒருவர் அவருடனே சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கூட வரும் அதுதான் சினிமா.

வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. முதல் படத்திலேயே வித்தியாசமான கதை களத்தை தொட்டிருந்தார். அஜித்துக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து விஜய் - ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவில் இதுதான் கிளைமேக்ஸ் என சொல்லி படத்தை துவங்கிய ஒரே இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவாகத்தான் இருக்கும். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சில படங்களை இயக்கி அதில் அவரே ஹீரோவாக நடித்தார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கிய எஸ்.ஜே.சூர்யா இப்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார்.

சில படங்களில் வில்லனாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் கூட நடித்திருக்கிறார். மாநாடு படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான மார்க் ஆண்டனி படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இப்போது ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ’லயோலா கல்லூரியில் படித்து முடித்தபின் கமல் மருதநாயகம் படத்தை எடுப்பது கேள்விப்பட்டு அப்படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்ய வாய்ப்பு கேட்டு போனேன். ‘யெஸ் டெல் மி’ என்றார். ‘என் பெயர் ஜஸ்டின் சார்’ என்றேன். ‘யெஸ் ஜஸ்டின்’ என்றார். என் பெயரை அவ்வளவு ஸ்டைலாக யாருமே உச்சரித்தது இல்லை.

ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவராலும் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. ஆனால், என் பயணத்தில் கமல் சாருடன் நடிக்கிறேன் என்பதே மிகப்பெரிய சந்தோஷம். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 இரண்டு படங்களிலும் கமல் சாருடன் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறேன்’ என எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Next Story