‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாட்ட நானும் யேசுதாஸும் சேர்ந்து பாடவே இல்ல!.. பகீர் தகவலை சொன்ன எஸ்.பி.பி
இளையராஜாவின் இசையில் பெரும்பாலும் ஆண் குரல் என்றால் எஸ்.பி.பலசுப்பிரமணியம், யேசுதாஸ், மனோ அல்லது மலேசியா வாசுதேவன் பாடுவார்கள். அதுவே பெண் குரல் என்றால் எஸ்.ஜானகி, சித்ரா, ஸ்வர்ணலதா என சில பாடகிகள் இருந்தார்கள். இளையராஜாவின் இசையில் பெரும்பலான பாடல்களை பாடியவர்கள் இவர்கள்தான்.
இளையராஜாவின் இசையில் பல சோக பாடல்களை பாடியவர் கே.ஜே.யேசுதாஸ். ஹீரோ சோகமாக பாடுகிறார். விரக்தியில் பாடுகிறார் என்றால் உடனே யேசுதாஸைத்தான் கூப்பிடுவார் இளையராஜா. அவரும் பல இனிமையான பாடல்களை பாடியிருக்கிறார். யேஸுதாஸ் பாடிய பல இனிமையான பாடல்களை ‘எனக்கு ஏன் கொடுக்கவில்லை?’ என ராஜாவிடம் சண்டை போட்டவர்தான் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி. சினிமாவில் பிஸியாக பாடிக்கொண்டிருந்த போதே வெளிநாடு போய் இசைக்கச்சேரிகளிலும் பாடுவார். இதனால், சில சமயம் அவர் சென்னையில் இருக்க மாட்டார். ஆனால், உடனே பாடலை ரெக்கார்டிங் செய்ய வேண்டி இருக்கும். அதே நேரம் எஸ்.பி.பிக்காக காத்திருக்கவும் முடியாது. எனவே, மனோ, மலேசியா வாசுதேவன், யேசுதாஸ் ஆகியோர்களில் ஒருவரை அழைத்து பாட வைப்பார் இளையராஜா.
ஒருபக்கம் எஸ்.பி.பியும், யேஸுதாசும் இணைந்து சில படங்களில் பாடி இருக்கிறார்கள். அந்த பாடல்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்தது. அதில் முக்கியமான பாடல் தளபதி படத்தில் இடம் பெற்ற ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ளே’. ரஜினிக்கு எஸ்.பி.பியும், மம்முட்டிக்கு யேசுதாஸும் பாடி இருப்பார்கள்.
ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட் பாடல் இது. இந்த பாடலை பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.பி ‘நானும் யேசுதாஸ் அண்ணாவும் சேர்ந்து பாடிய பாடலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நான் தனியாக இசைக்கச்சேரியில் பாடும்போதும் சரி, அண்ணா தனியாக பாடினாலும் சரி ரசிகர்கள் இந்த பாடலைத்தான் கேட்பார்கள்’
ஆனால், இந்த பாடலை நாங்கள் இருவரும் இணைந்து பாடவில்லை. நான் மும்பையில் பாடினேன். அவர் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பாடினார். அழகான உணர்வு அது. இருவரும் இணைந்து அந்த பாடலை பாட முடிய வில்லையே என்கிற ஏக்கத்தை பல மேடைகளில் ஒன்றாக இந்த பாடலை பாடி தீர்த்துக்கொண்டோம்’ என சொல்லி இருக்கிறார்.