
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் மூன்று வாரங்களாக ஊரடங்கு அமுலில் உள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் பெரிதாக அறிவிக்கப்படவில்லை. இதர 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அழகு நிலையங்கள், சலூன்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்டுமான நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி மற்றும் இ சேவை மையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி பாதிப்பு தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு பேருந்து இயக்கம் உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகள் எந்நேரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 11 மணியளவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். நிபுணர்களின் கருத்துக்களை கேட்டபின் முதல்வர் தளர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





