சூர்யாவுக்கு பிறந்தநாள்: துவக்கம் முதல் வாடிவாசல் வரை.... தெறிக்கும் மாஷப் வீடியோ....
நடிகர் சிவகுமாரின் மகனான சரவணன் தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலம் சூர்யாவாக ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பின் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவருக்கு பல ரசிகர்களும் உருவாகியுள்ளனர். அவரை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் ஆசைப்படுகின்றனர்.
திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ‘அகரம் ஃபவுண்டேசன்’ எனும் கல்வி இயக்கத்தை நடத்தி வருகிறார். அதில், படிப்பதற்கு பணம் இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெற உதவி வருகிறார். சூர்யா மூலம் படித்த பலரும் மருத்துவர்களாகவும், மற்ற துறைகளிலும் உயர்ந்துள்ளனர். சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இந்த திரைப்படம் பாலிவுட்டுக்கு போகிறது.
தற்போது ‘நவரசா’ எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக கொண்டது. எனவே, இப்போதே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, சமூகவலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக அவர் நடித்துவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வீடீயோ நேற்று வெளியாகியது.
இந்நிலையில், சூர்யா நடிக்க துவங்கியது முதல் தற்போது வரை அதாவது 1997 முதல் 2021 வரை 27 வருடங்களுக்கான சூர்யாவின் திரைப்பயணத்தை அவர் நடித்த படங்களின் திரைப்பட காட்சிகள் மற்றும் பேட்டிகள் ஆகியவற்றை தொகுத்து நெட்டிசன் ஒருவர் ஒரு வீடியோவை உருவாக்கி அதற்கு 'Suriya Birthday mashup' என பெயர் வைத்துள்ளார். இந்த வீடியோவை நடிகரும், சூர்யாவின் சகோதரருமான கார்த்தி டிவிட்டரில் பகிர்ந்து சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.