கண்ணீரை அடக்கமுடியவில்லை!...சூர்யா பட பாடலை பார்த்து கதறி அழுத அமிதாப்பச்சன்...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த வருடம் தீபாவளி நேரத்தில் அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இதுவரை அமேசான் பிரைமில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என இப்படம் சாதனை படைத்துள்ளது.மேலும், சிறந்த கதை, திரைக்கதை என விமர்சகர்கள் பாராட்டினர். மேலும், சூர்யாவின் நடிப்பையும், சுதா கொங்கராவின் இயக்கத்தையும் பலரும் பாராட்டினர். இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது.

இப்படத்தின் இறுதிகாட்சியில் சூர்யா தனது லட்சியத்தில் வெற்றி பெற்று, ஒருவழியாக குறைந்த விலையில் விமான போக்குவரத்து நடக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிகரமாக படம்பிடிக்கப்பட்டிருக்கும். சூர்யாவின் சொந்த ஊரில் வசிக்கும் சாதாரண மக்கள் மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சியுடன் விமான பயணத்தை சூர்யாவுடன் பகிர்ந்து கொள்ளும் காட்சி மிகழும் நெகிழ்ச்சிகரமானது. பலரையும் அழ வைத்த காட்சி இது. அப்போது ‘கையிலே ஆகாசம்’ என்கிற பாடல் ஒலிக்கும்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இப்பாடல் பற்றி தெரிவித்துள்ள கருத்தில் ‘சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இடம் பெற்ற அந்த பாடலை பார்த்தேன். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என் கண்கள் குளமாகின. இந்த பாடல் மிக அழகாக, ஆழமாக,மென்மையாக மனதை தொடுகிறது. இதைப்பற்றி பேசும் போதே உணர்சிகளை கிளறுகிறது’ என தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்பாடலை யுகபாரதி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.