More

70ஸ் 80ஸை கலக்கிய சுருளிராஜன் காமெடிகள்

சுருளிராஜன் தமிழ்நாட்டின் தற்போதைய தேனி மாவட்ட அப்போதைய மதுரை மாவட்டமான பெரியகுளத்தில் பிறந்தவர். தேனி மாவட்டத்தில் சுருளி அருவி என்ற புகழ்பெற்ற அருவி உள்ளது. பல ஹிந்துக்கள் இப்போதும் ஆடி அமாவாசை, உள்ளிட்ட புகழ்பெற்ற நாட்களில் இங்கு நீராடுவது வழக்கம் இது புண்ணிய நதியாக உள்ளது. இங்கு புகழ்பெற்ற கோவில்களும் உள்ளது.

Advertising
Advertising

சுருளி அருகே சுருளி வேலப்பர் கோவில் உள்ளது.இந்த கோவில்தான் நடிகர் சுருளிராஜனின்  குலதெய்வம் குலதெய்வத்தின் பெயரே அவருக்கு இடப்பட்டது.

இந்த நிலையில் சுருளிராஜனின் தந்தை அங்குள்ள விவசாயப்பண்ணையில் கணக்கு பிள்ளையாக பணிபுரிந்து வந்தபோது இறந்து விட்டார். தந்தையின் மறைவுக்கு பிறகு சுருளிராஜன் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.

சிறுவயதில் இருந்தே சினிமா மீது பற்றுக்கொண்ட சுருளி ஒரு கட்டத்தில் சென்னைக்கு வந்து நடிக்க வாய்ப்பு தேடினார் அவருக்கு முதலில் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் எழுதிய காகிதப்பூ உள்ளிட்ட நாடகங்களில் நடித்தார்.

முதன் முதலில் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் சிறு வேடத்தில் சுருளி நடித்தார். பிறகு ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

ஏ.பி நாகராஜன் இயக்கிய பக்தி படமான திருமலை தென்குமரி என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தலைமையில் பலரும் ஆன்மிக டூர் செல்வதுதான் கதை அக்கதையில் சுருளிராஜனும் படு லோக்கலான கேரக்டரில் காமெடிக்காக இணைக்கப்பட்டிருப்பார் மனோரமா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். மன்னாரு என்ற அந்த கதாபாத்திரத்தில் சுருளி கலக்கி இருப்பார் என்று சொல்ல வேண்டும்.

ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் சுருளிராஜன் நடிக்க வந்தாலும் பெல்பாட்டம் காலமான 70களின் இறுதியும் 80களின் ஆரம்பம் தான் சுருளிராஜனுக்கு பொற்காலமான காலம் என சொல்லலாம். ஏனென்றால் இரவும் பகலும் பிஸி என சொல்லும் அளவுக்கு சுருளிராஜனுக்கு சினிமா வாய்ப்புகள் வந்து குவிந்தது.

80, 70களின் வடிவேலு என சுருளியை சொல்லலாம் எல்லா காமெடி நடிகர்களையும் விட வடிவேலுவின் காமெடியை நாம் இப்போது எப்படி பார்த்து ரசிக்கிறோமோ அப்படி சுருளியின் காமெடியை அந்த நேரத்தில் பார்த்து ரசித்தார்கள் என சொல்ல வேண்டும்.

மாலைக்கண் நோயை சமாளிக்கும் வேடத்தில் ஒரு படத்தில் நடித்து இருப்பார். அது போன்ற காட்சிகளை சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி திரும்ப நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளி பிறந்தது என்ற படத்தில் குதிரை வண்டி ஓட்டுபவர் வேடத்தில் சுருளி நடித்திருப்பார். அவரின் குதிரை எங்கு பிணத்தை பார்த்தாலும் நின்று விடும் முக்கியமாக சவாரி செல்லும் நேரத்தில் அந்த குதிரை பிணத்தை சாலையில் பார்த்தால் நின்று விட அதை சமாளிக்க படாதபாடு படுவார் சுருளி.

மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் கஞ்ச மகா சக்கரவர்த்தியாக சுருளிராஜன் நடித்த கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படும். மாந்தோப்பு கிளியே படத்தின் மூலம்தான் சுருளிராஜனின் காமெடி அந்தஸ்து உயர்ந்தது.

ஒரு படத்தில் வீட்டுக்குள் பாம்பை விட்டு விட்டு வீட்டுக்காரர்களிடம் பாம்பு பிடிக்கிறேன் என சொல்லி ஏமாற்றி காசு வாங்கும் வேடம் சுருளிக்கு இந்த காமெடியை பல வருடம் கழித்து எஸ்.எஸ் சந்திரனும் செந்திலும் செய்திருந்தனர் இது போல சுருளிராஜன் காமெடிகள் மீண்டும் யாரோ ஒருவரால் வேறு வடிவில் செய்யப்பட்டிருக்கும்.

தற்போதுள்ள யோகிபாபு, சூரி, வடிவேலு, அதற்கு முன் கவுண்டமணி, செந்தில், சார்லி, விவேக் என எல்லோரும் அந்த நேரத்தில் புகழ்பெற்ற ஹீரோக்களுக்கு நெருக்கமான நண்பராக நடித்தவர்கள்தான். ஹீரோவோடு சேர்ந்து பயணித்து கொஞ்சம் காமெடி செய்து படம் தொய்வடையாமல் இவர்கள் பலமாக இருப்பார்கள்.

அப்படியாக எண்பதுகளின் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் சுருளிராஜனும் இருப்பார். சுருளிராஜன் காமெடியோடுதான் 70களின் இறுதி 80களின் ஆரம்ப கால ரஜினி , கமல் படங்கள் வெளிவந்துள்ளன. ரஜினியின் ஜானி, ஆயிரம் ஜென்மங்கள், அன்னை ஓர் ஆலயம், அன்புக்கு நான் அடிமை, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால் , பொல்லாதவன், தாய் மீது சத்தியம் உள்ளிட்ட அதிகமான ரஜினி படங்களில் குறுகிய காலத்தில்  சுருளிநடித்துள்ளார்.

அதுபோல் கமலுடன் ராம் லக்‌ஷ்மண், தாயில்லாமல் நானில்லை, மீண்டும் கோகிலா என பல படங்களில் நடித்துள்ளார். சுருளிராஜனின் பேச்சும் பாடி லாங்வேஜும் தனிரகம் அவரை திரையில் பார்த்த உடனே ரசிகர்கள் அந்தக்காலங்களில் கொண்டாடினர் என சொல்லலாம்.

நன்றாக படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கும்போதே 1980ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மிக குறைந்த வயதான 42 வயதில் சுருளிராஜன் மரணமடைந்தார். சுருளி புகழ்பெற்ற நடிகராக நடித்துக்கொண்டிருந்தபோதே மரணமடைந்ததால் அவர் இறந்த பிறகும் அவர் நடித்த பல படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இவர் இறந்து நான்கு வருடங்கள் வரை இவரது படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் அவ்வளவு படங்களில் சுருளிராஜன் நடித்துள்ளார். மேலும் இவர் 81 மற்றும் 82ம் ஆண்டுக்கான காமெடி நடிகருக்கான கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

சுருளிராஜனுக்கு சண்முகவேல்ராஜன், குமரவேல்ராஜன், செந்தில்வேல்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.

Published by
adminram

Recent Posts