தனது உரிமையாளரைக் கொன்றவர்களைக் காட்டிக் கொடுத்த பைக் – இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி !

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூரில் கணவன் மற்றும் மனைவி இருவரையும் கொலை செய்த கொலையாளிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியுள்ளனர்.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரம்பிகுலம் எனும் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் லதா ஆகிய தம்பதிகள் தங்கள் வீட்டுக்கு அருகே இருந்த கட்டிலில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வீடு ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் இருந்ததால் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸார் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கடலூர் மாவட்டம் வேப்பூரில் ஒரு இரு சக்கர வாகன விபத்து நடக்க, அந்த பைக் கொலை செய்யப்பட்ட ரமேஷினுடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர்களான பழனிச்சாமி மற்றும் கிஷாந்த் ஆகிய இருவரும் 10 பவுன் நகைக்காகவும் இரு சக்கரவாகனத்துக்காகவும் அவர்களைக் கொலை செய்துவிட்டு, இரு சக்கர வாகனத்தின் எண்ணை தமிழில் மாற்றி ஒட்டி வந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

Published by
adminram