ஓடிடி-யில் ரிலீஸ் பண்றீங்களா?.. அப்ப இனிமே இப்படித்தான்... ஷாக் கொடுத்த தியேட்டர் அதிபர்கள்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இடையில், கடந்த வருடம் நவம்பம் மாதம் முதல் மார்ச் மாதம் வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது தியேட்டர்கள் மூடி 100 நாட்களுக்கும் மேலாகி விட்டது. எனவே, ஏராளமான திரைப்படங்கள் அமேசான் பிரைம், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தனது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலம் இதை துவங்கி வைத்தார்.
அதன்பின், விஜய்சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகி வருவதால் தியேட்டர்களின் நிலைமை கேள்விக்குறி ஆகியுள்ளது. இருட்டு அறையில் பெரிய அறையில் தியேட்டரில் பார்க்கும் அனுபவம் ஓடிடியில் கிடைக்காது என்றாலும் ரசிகர்களும் வேறு வழியில்லாமல் ஓடிடியில் புதிய படங்களை பார்த்து வருகின்றனர். இதில், சில திரைப்படங்கள் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கூட தியேட்டரில் ரிலீஸ் ஆகி 15 நாட்களிலேயே ஓடிடியில் வெளியானது. தற்போது நடிகர் சூர்யா தான் தயாரிக்கும் 4 திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில்,இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தினர். முடிவில் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை தியேட்டரில் திரையிட அனுமதிக்கப்போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும், தியேட்டரில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடி-யில் வெளியிடப்படும் என ஒப்பந்தம் போடப்படும் எனவும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதோடு, ஓடிடி-யில் வெளியாகும் படங்களின் பிரிவியூ காட்சிக்கும் திரையரங்குகள் வழங்குவதில்லை என அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
தியேட்டர் அதிபர்களின் இந்த அறிவிப்பு ஓடிடி மற்றும் தியேட்டர் என இரண்டிலும் கல்லா கட்ட நினைத்த தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.