12 நாள்களில் உருவான திகில் படம் இதுதான்..!
நடிகர் மோகன் மைக் மோகன் என்றே ரசிகர்களால் அறியப்பட்டார். ஏனென்றால் அவரது பாடல்கள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானது. அவர் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பராக இருக்கும். பாடல்களுக்காகவே அவரது படங்களைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருவர்.
ரஜினி கமல் கோலூச்சிய கால கட்டத்திலும் தனக்கான தனி பாணியைக் கொண்டு ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதில் மாபெரும் வெற்றியைக் கண்டு வந்ததால் இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைப்பர்.
இந்த வட்டத்தில்; இருந்து வெளியே வருவதற்காக தனக்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருந்தார் மோகன். அப்போது தான் உருவம் என்ற படம் அவருக்கு வந்தது. அது ஒரு திகில் படம். அறுவடை நாள் படத்தை இயக்கிய ஜி.எம்.குமார் இப்படத்தின் இயக்குனர். இவர் பாக்கியராஜின் முன்னாள் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக் மோகனாக தமிழ்த்திரையுலகில் வெற்றி நடை போட்ட மோகனுக்கு 90க்குப் பிறகு பெரிய பிரேக் விழுந்தது. பேர் சொல்லும் அளவில் படங்கள் இல்லை. 95ல் தான் உருவம் படம் வந்தது. இளையராஜாவின் இசையில் மோகன், பல்லவி, ஆர்.பி.விஸ்வம், வீர பாண்டியன், ஜெய்மாலா, சத்யஜித் உள்பட பலர் நடித்திருந்தனர்.
மகன் உறவில் பணக்கார குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது. இதில் முறைப்படி பிறக்காத மகன், முறையாக பிறந்த மகனான மோகன் மீது பங்காரு முனியிடம் சென்று அழிவினை உண்டாக்கக்கூடிய சூனியத்தை ஏவுகிறார். மோகன் மனைவி, குழந்தைகள், தங்கை, மைத்துனர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவர்கள் தங்களுக்கு கிடைத்த அரண்மனைக்கு குடியேறுகின்றனர்.
மோகன் ஒரு இறை மறுப்பாளர். அதனால் அவரது குடும்பம் தீய சக்திகளால் பாதிக்கப்படுகிறது. இது மோகனின் உடலுக்குள் சென்று கடவுளைக் கும்பிடும் அவரது மனைவி, ப்காரு முனி, குழந்தைகள், மைத்துனரைக் கொல்கிறது. கடைசியில் ஆர்.பி.விஸ்வம் தீய சக்தியுடன் போராடி மோகனைக் காப்பாற்றுகிறார். அவரை ஒரு மனநல காப்பகத்திற்கு அனுப்புகிறார். அப்போதுதான் கடவுள் உண்டு. தான் தான் இதுவரை நம்பாமல் இருந்து விட்டோம். அதனால் தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வருந்துகிறார் மோகன்.
படம் திகில் படம். அதிலும் இளையராஜாவின் பின்னணி இசை பின்னி பெடல் எடுக்கிறது. ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றது. 105 நிமிடங்களே ஓடக்கூடிய சிறிய படம். இந்தப்படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. என்றாலும், மோகனின் மற்ற படங்களை ஒப்பிடுகையில் இது தோல்வி படம் தான். ஆனால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
12 நாள்களில் இப்படம் தயாரானது. சண்டைக்காட்சிகளே இல்லாத படம். மோகனுக்கே உரிய வழக்கமான பாடல்கள், காதல் இப்படத்தில் கிடையாது.
மோகன் உடலுக்குள் உள்ள தீய சக்தி மோகனின் தங்கையை துரத்த, அவளோ அந்த அரண்மனை முழுவதும் இங்கும் அங்குமாக பதறிய படி அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியில் நெஞ்சம் பதறுகிறது. பின்னணி இசையோ ரத்தத்தை உறைய வைக்கிறது.
சிறு குழந்தைகள் படம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்திற்கு வயது வந்தோருக்கான படம் என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. மோகனை பேய் உருவில் பார்ப்பதற்கு கோரமாகவும் மிரட்டலாகவும் பயமுறுத்தச் செய்கிறது.