நகைச்சுவையால் தமிழ்சினிமாவை கலக்கிய தூத்துக்குடிகாரர் இவர்தான்..!

by adminram |

dc77a711fbc1ee30b9fec6fd2e311322

குங்குமப்பூவே....கொஞ்சு புறாவே....! என்றஇந்தப் பாடலைக் கேட்ட உடனே நமக்கு நினைவுக்கு வருபவர் சந்திரபாபு தான். மரகதம் படத்திற்காக இவர் பாடிய அருமையான காதல் பாடல் இது. எவராலும் சட்டென்று மறக்க முடியாத தமிழ்சினிமாவின் உன்னத நட்சத்திரம். ஆடலுடன், முகபாவனையுடன், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர். இவர் பாடலைப் பார்த்தால் நகைச்சுவை இழையோடும். கேட்டால் தத்துவம் கவிபாடும். இவரைப்பற்றி சில நொடிகள் உங்களின் நினைவுகளுக்கு...!

5.8.1927ல் தூத்துக்குடியில் பிறந்தார் ஜே.பி.சந்திரபாபு. தமிழ்த்திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவான். சிறந்த பாடகரும் கூட. மேலும், இயக்குனர், நடனம் என பின்னிப் பெடலெடுத்தார்.

தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் பிச்சை. பாபு என செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் சந்திரகுல வம்சம் ஆதலால் சந்திரபாபு என பெயரை மாற்றிக் கொண்டார்.

722131a56ae9a1fc48070dbbafb289a0

சுதந்திரப்போராட்ட வீரரான இவரது தந்தையை பிரித்தானிய அரசு இலங்கைக்கு கடத்தியது. சந்திரபாபு கொழும்பில் கல்லூரிப்படிப்பை தொடர்ந்தார். 1943ல் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறினர். அப்போது தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.

சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றார் சந்திரபாபு. 1947ல் வெளியான தன அமராவதி படம் தான் இவருக்கு அறிமுகத்தைத் தந்தது. 1950களில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருடன் கைகோர்த்து நகைச்சுவை நடிப்பில் நடித்து அசத்தினார். சபாஷ்மீனா படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்தார். அதில் ஒரு வேடத்தில் சரோஜாதேவி தான் இவருக்கு ஜோடி. அதேபோல் புதையல் படத்தில் சிவாஜியுடன் காதலி பத்மினிக்காக போட்டி போடுவார்.

மெட்ராஸ் பாஷையை தமிழ்சினிமாவில் பேசி பலரது பாராட்டுகளை பெற்றார். இவருக்கு என்றே ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது.

550635f4aca69b26e68f6be2ab68d415-1

சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை சோகமயமானது. அவர் மனைவியாக வந்தவர் வேறொருவரை விரும்புவதாக கூறியதால், அவருடனேயே மகிழ்ச்சிகரமாக அனுப்பி வைத்தார் சந்திரபாபு.

கதாநாயகனாக நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவின. கவலை இல்லாத மனிதன், குமார ராஜா, தட்டுங்கள் திறக்கப்படும் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

அடிமைப்பெண், ராஜா, கண்ணன் என் காதலன் ஆகிய படங்களில் நடித்தார். 1974ல் நடித்த பிள்ளைச் செல்வம் தான் இவருக்கு கடைசி படம். அதே ஆண்டில் இவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் மறக்க முடியாத படங்கள் இவை. அன்னை, பாதகாணிக்கை, நாடோடி மன்னன், மரகதம், மணமகன் தேவை ஆகிய படங்கள்.

4caf2d0049dd5e0863721eaaf2a76171-1

சந்திரபாபு மேற்கத்திய பாணியிலான பாடல்களைப் பாடுவதில் மிகச்சிறந்தவர். அவரது பாடல்களுக்கு அவரே இசை அமைத்ததாகவும் கூறுவர்.

இன்று வரை அவரது பாடல்கள் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை ஒரு பிளாஷ்பேக்காக பார்ப்போம்.

குமாரராஜா படத்தில் பிறக்கும்போதும் அழுகின்றான், கவலை இல்லாத மனிதன் படத்தில் ஒண்ணுமே புரியலே உலகத்திலே, சகோதரி படத்தில் நான் ஒரு முட்டாளுங்க, அன்னை படத்தில், புத்தியுள்ள மனிதரெல்லாம், போலீஸ்காரன் மகள் படத்தில் பொறந்தாலும் ஆம்பிளயா....பொறக்கக்கூடாது, காத்தவராயன் படத்தில் சீமையெல்லாம் தேடிப்பார்த்து, பெண் படத்தில் கல்யாணம் வேணும் வாழ்வில், மாமன் மகள் படத்தில் கோவா மாம்பழமே, புதையல் படத்தில் உனக்காக எல்லாம் உனக்காக, மணமகன் தேவை படத்தில் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே, நாடோடி மன்னன் படத்தில் தடுக்காதே என்னைத் தடுக்காதே என்று தனது பாடல்களை தனது வசிய குரலால் கேட்போர் மனங்களில் இன்புறச்செய்தவர்.

இவரது நடன நெளிவு சுழிவுகளைப் பார்த்தால் பிரபுதேவாவின் முன்னோடி இவராகத் தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

Next Story